சுடச்சுட

  

  'வந்தே மாதரம்' பாடலை எதிர்ப்பது குறுகிய மனப்பான்மை: யோகி ஆதித்யநாத்

  By DIN  |   Published on : 09th April 2017 12:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  yogiAdity

  "வந்தே மாதரம்' பாடலைப் பாட மறுப்பது குறுகிய மனப்பான்மையின் வெளிப்பாடு என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
  அலகாபாத் மாநகராட்சிக் கூட்டத்தை "வந்தே மாதரம்' பாடலுடன் தொடங்க வேண்டும் என்று மாநில அரசு அண்மையில் பிறப்பித்த உத்தரவு பெரும் விமர்சனங்களுக்கு வித்திட்டது. இந்த முடிவை சமாஜவாதி உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
  இதே விவகாரம் மீரட் மற்றும் வாராணசி மாநகராட்சிகளிலும் எதிரொலித்தது. அந்த மாநகராட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரும் "வந்தே மாதரம்' பாடலை பாடுவதைக் கட்டாயமாக்கக் கூடாது என்றனர்.
  இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். லக்னெளவில் சனிக்கிழமை நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவொன்றில் இதுதொடர்பாக அவர் பேசியதாவது: 21-ஆம் நூற்றாண்டில் இந்த தேசத்தை வளர்ச்சிக்கான பாதையில் முன்னெடுத்துச் செல்வதில் நாங்கள் முனைப்பாக உள்ளோம். இந்தச் சூழலில், தேசபக்தியை வெளிப்படுத்தும் "வந்தே மாதரம்' பாடலைப் பாடுவதை சர்ச்சையாக சிலர் மாற்றியுள்ளனர்.
  அண்மையில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் 150-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதற்கான நிறைவு விழாவில் பிரதமர் மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியானது "வந்தே மாதரம்' பாடலுடன்தான் தொடங்கியது.
  முக்கியமான தருணங்களை தேசபக்திப் பாடலுடன் தொடங்குவது நல்ல நோக்கமாகக் கருதப்படுகிறது. ஆனால், "வந்தே மாதரம்' பாடலைப் பாட மறுப்பது சிலரது குறுகிய மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai