சுடச்சுட

  

  விமானப் பயணிகள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் கடும் நடவடிக்கை:  மத்திய அரசு எச்சரிக்கை

  By DIN  |   Published on : 09th April 2017 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் விமானப் பயணிகள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.
  மகாராஷ்டிர மாநிலம், உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதி சிவசேனை எம்.பி.யான ரவீந்திர கெய்க்வாட், ஏர்-இந்தியா விமான நிறுவன அதிகாரியை கடந்த மாதம் (மார்ச் 23) காலணியால் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
  இதையடுத்து, ஏர்-இந்தியா விமானத்தில் அவர் பயணிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ரவீந்திர கெய்க்வாட் வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் மீதான தடையை ஏர்-இந்தியா விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை விலக்கிக் கொண்டது.
  இந்நிலையில், விமானப் பயணிகளின் நடத்தை தொடர்பாக அறிவுறுத்தும் வகையில் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா, சுட்டுரையில் (டுவிட்டர்) சனிக்கிழமை சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அவற்றில் அவர் கூறியுள்ளதாவது:
  பயணிகள் மற்றும் விமான ஊழியர்களின் பாதுகாப்பே மிகவும் முக்கியம் என்பதை விமானத்தில் பயணிப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒழுங்கீனமான மற்றும் இடையூறு ஏற்படுத்தும் நடத்தையானது கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும். அந்த விளைவுகளில் போலீஸ் நடவடிக்கை மற்றும் விமானங்களில் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சம்பந்தப்பட்டவரைச் சேர்த்தல் ஆகியவை அடங்கும். 
  விமானப் பயணங்களின்போது ஒழுங்கீனமான சம்பவங்களைத் தவிர்த்து பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக எங்கள் அமைச்சகம் விதிமுறைகளை வலுப்படுத்தி வருகிறது. இதன் மூலம் விமானங்களில் பறப்பதற்குத் தடை விதிக்கப்பட்டோர் பட்டியலை முறைப்படி அமலாக்க முடியும்.
  சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாட் விவகாரத்தைப் பொருத்த வரை, நடந்த சம்பவத்துக்காக அவர் மன்னிப்பு கோரியதோடு, அதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது என்று உறுதிமொழியும் அளித்துள்ளார். எனவே, அவர் மீதான தடையை நீக்குமாறு ஏர்-இந்தியாவுக்கு அரசு அறிவுரை வழங்கியது.
  கெய்க்வாட் தொடர்புடைய சம்பவம் தொடர்பாக போலீஸாரின் புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும். இந்த விவகாரத்தில் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். நிச்சயமாக நீதி வழங்கப்படும். கெய்க்வாடுக்கு எதிராக 308, 355 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவுகளில் ஜெயந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai