சுடச்சுட

  

  ஹரியாணா: நெடுஞ்சாலைகளில் 1 லட்சம் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த முடிவு

  By DIN  |   Published on : 09th April 2017 12:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஹரியாணாவிலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு லட்சம் கண்காணிப்பு (சிசிடிவி) கேமராக்களைப் பொருத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  இதுதொடர்பாக, ஹரியாணா அரசு சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  சிர்ஸா, ஃபதேஹாபாத் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ள ரூ. 107 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
  விழாவில் முதல்வர் பேசுகையில், மாநிலத்திலுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரு லட்சம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தெரிவித்தார்.
  நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும்போது, பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கும் இந்த ஏற்பாடு உதவும் என்று அவர் குறிப்பிட்டார்.
  பின்னர் சௌத்ரி தேவிலால் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற "மக்கள் தரிசன' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். பொதுமக்களிடம் குறைகளைக் கேட்ட அவர், அவை குறித்த மனுக்களை அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
  தொடர்ந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும், "கிராமப் பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்; இப்பணிகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதுடன், அந்தத் திட்டங்களை செயல்படுத்துவதற்குத் தேவைப்படும் நிதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று அவர் கேட்டுக் கொண்டார்.
  அப்போது, உடனிருந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் கிருஷன் லால் பன்வாரிடம், அவரது துறை ரீதியிலான குறைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டார் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai