சுடச்சுட

  

  சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் தொடர்பாக தில்லியில் தேர்தல் ஆணையர்களுடன் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலை நடத்துவதா அல்லது தள்ளிவைப்பதா என்பது குறித்து திங்கள்கிழமை (ஏப்ரல் 10) மாலை நடைபெறும் தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் கூட்டத்தில் முக்கிய முடிவெடுக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  ஆர்.கே.நகர் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அத்தொகுதிக்கு வரும் புதன்கிழமை (ஏப்ரல் 12) இடைத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  இந்நிலையில், தேர்தலில் வாக்காளர்களுக்குப் பெருமளவில் பணம், பரிசுப் பொருள்கள் அளிக்கப்பட்டு வருவதாக திமுக, பாஜக, மார்க்சிஸ்ட், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் புகார் அளித்திருந்தனர்.
  இது தொடர்பாக தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திடமும் திமுக உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்திருந்தன. இதையடுத்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் வகையில் சிறப்பு அதிகாரியாக விக்ரம் பாத்ரா நியமிக்கப்பட்டிருந்தார். அவர் தேர்தல் ஆணையர்களைச் சந்திப்பதற்காக சனிக்கிழமை இரவு தில்லி வந்திருந்தார்.
  இதற்கிடையே, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்கு நெருக்கமானவர்கள் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் விதிமீறல் விவகாரம் குறித்து அறிக்கை அளிக்குமாறு ராஜேஷ் லக்கானிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
  தில்லியில் லக்கானி: இதைத் தொடர்ந்து, தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி ஞாயிற்றுக்கிழமை காலை தில்லி வந்தார். காலை 10.15 மணியளவில் தலைமைத் தேர்தல் ஆணையத்திற்குச் சென்றார். அங்கு சிறப்பு அதிகாரி விக்ரம் பாத்ராவும் இருந்தார். அங்கு தேர்தல் ஆணையர்கள் ஏ.கே. ஜோதி, ஓம் பிரகாஷ் ராவத் ஆகியோரை ராஜேஷ் லக்கானி சந்தித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. அமைச்ர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனை குறித்தும் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாகக் கூறப்படும் புகார்கள் குறித்தும் அப்போது விவாதித்ததாகத் தெரிகிறது.
  இன்று முடிவு: இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் அனைத்து உயரதிகாரிகள் பங்கேற்கும் கூட்டம் திங்கள்கிழமை (ஏப்ரல் 10) மாலை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் பணப்பட்டுவாடா, பரிசுப் பொருள் வழங்கியது தொடர்பான புகார்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அப்போது, ஆர்.கே. நகர் இடைத் தேர்தலை நடத்துவதா, ரத்து செய்வதா அல்லது தள்ளிவைப்பதா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai