சுடச்சுட

  

  உயர் நீதிமன்றம் விடுவித்த குற்றவாளி சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 10th April 2017 12:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sc

  கொலை வழக்கு ஒன்றில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் நேர்ந்த பிழை காரணமாக, விடுவிக்கப்பட்ட குற்றவாளியை உடனடியாகச் சரணடையுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  தில்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவரான ஜிதேந்தர், கடந்த 1999-ஆம் ஆண்டு மார்ச் மாதம், வடக்கு தில்லியில் திருமண நிகழ்ச்சியொன்றில் புகுந்து சத்யவதி கல்லூரியின் அப்போதைய மாணவர் சங்கத் தலைவர் அனில் பதானாவை சுட்டுக் கொன்றார்.
  கொலை வழக்கு ஒன்றில் ஜிதேந்தருக்கு எதிராக அனில் பதானா வாக்குமூலம் அளிக்க இருந்ததால், அவரை ஜிதேந்தர் கொலை செய்ததாகக் கூறப்பட்டது.
  இந்தச் சம்பவத்துக்கு மறுநாள், அனில் பதானா கொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறைக்குத் தகவல் கொடுத்தவரின் தந்தையை, அவரது வீட்டுக்குச் சென்று ஜிதேந்தர் சுட்டுக் கொன்றார்.
  இந்தக் கொலை வழக்குகளை விசாரித்த விசாரணை நீதிமன்றம், ஒரு வழக்கில் ஜிதேந்தருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு வழக்கில், எஞ்சிய காலத்தை அவர் சிறையில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
  இந்தத் தீர்ப்பை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் ஜிதேந்தர் மேல்முறையீடு செய்திருந்தார். அவரது மனுவை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் அவருக்கு அதிகப்படியான தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அவரை உடனடியாக விடுவிக்குமாறு கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது. அதையடுத்து அவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
  அதைத் தொடர்ந்து, எழுத்துப் பிழை காரணமாக தவறான உத்தரவைப் பிறப்பித்துவிட்டதாகக் கூறிய தில்லி உயர் நீதிமன்றம், அவரை உடனடியாகக் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தில்லி காவல் துறைக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டிருந்தது.
  ஆனால், அதற்குள் ஜிதேந்தர் தலைமறைவாகி விட்டார்.
  இருப்பினும், ஜிதேந்தர் தனது வழக்குரைஞர் மூலமாக, கைதாவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
  அவரது மனுவை நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரிக்க மறுத்ததுடன், அவரை உடனடியாகச் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai