சுடச்சுட

  

  உள்நாட்டு விமானப் பயணத்துக்கு ஆதார் கட்டாயம்? மத்திய அரசு பரிசீலனை

  By DIN  |   Published on : 10th April 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Aadhar

  உள்நாட்டு விமானப் பயணத்துக்கு ஆதார் அல்லது கடவுச்சீட்டை (பாஸ்போர்ட்) கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
  தில்லியில் சிவசேனை எம்.பி. ரவீந்திர கெய்க்வாட், ஏர் இந்தியா நிறுவன விமானத்தில் பயணித்தபோது இருக்கை ஒதுக்குவது தொடர்பாக நேரிட்ட தகராறில், அந்நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளரை காலணியால் தாக்கினார். இதையடுத்து, அவருக்கு விமானங்களில் பயணம் செய்ய ஏர் இந்தியா உள்பட பல்வேறு விமான நிறுவனங்களும் தடை விதித்தன.
  தனது செயலுக்காக மக்களவையில் கெய்க்வாட் மன்னிப்பு கோரியதையடுத்தே, அவர் மீதான தடையை விமான நிறுவனங்கள் விலக்கிக் கொண்டன.
  இதேபோல், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை பெண் எம்.பி. டோலா சென்னும், ஏர் இந்தியா விமான ஊழியருடன் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக தகராறில் ஈடுபட்டார். இதனால் அந்த விமானம் சுமார் 40 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டது. இதுபோன்ற சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவதை கருத்தில் கொண்டு, விமானப் பயணத்தின்போது மோசமாக நடந்து கொள்ளும் பயணிகளுக்கு தடை விதிக்கும் வகையில், மோசமான பயணிகள் பட்டியலை தயாரிக்க மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா சுட்டுரையில் சில பதிவுகளை வெளியிட்டிருந்தார். அதில் அவர், தடை விதிக்கப்பட்ட பயணிகளின் பட்டியலில் மோசமாக நடக்கும் பயணிகளின் பெயர் சேர்க்கப்படுவதுடன், காவல்துறையின் மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளது. மேலும், உள்நாட்டு விமான பயணத்துக்கு ஆதார் அல்லது கடவுச்சீட்டை கட்டாயமாக்குவது குறித்த வரைவை அடுத்த வாரத்துக்குள் தயார் செய்யும்படி விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையத்தை (டிஜிசிஏ) மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. அதையேற்று அந்த வரைவை தயார் செய்யும் பணியை விமானப் போக்குவரத்து துறையின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்பான டிஜிசிஏ இந்த வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்தத் தகவலை விமான போக்குவரத்து அமைச்சக செயலர் ஆர்.என். சௌபே தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai