சுடச்சுட

  

  குஜராத் பேரவைத் தேர்தலில் மோடியை முன்னிறுத்திப் பிரசாரம்: பாஜக முடிவு

  By DIN  |   Published on : 10th April 2017 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குஜராத் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடியை முன்னிறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்போவதாக அந்த மாநில பாஜக தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்ததாவது:
  இந்திய அளவில் பிரதமர் மோடியை முன்னிறுத்திதான் நாங்கள் தேர்தலை எதிர்கொள்கிறோம். குஜராத் மாநிலத்திலும், எதிர்வரும் தேர்தலில் அவரை முன்னிறுத்தியே பிரசாரம் மேற்கொள்வோம்.
  குஜராத் மாநில பாஜகவைப் பொருத்தவரை, மோடியையும், அமித் ஷாவையும் விட்டால் மக்கள் செல்வாக்கு மிக்க வேறு தலைவர்கள் எவருமில்லை.
  இந்தத் தேர்தல், பாஜகவுக்கு ஒரு கெüரவப் பிரச்னையாக இருக்கும். எனவே, இதுவரை இல்லாத அளவுக்கு கூடுதல் இடங்களைப் பெற முடிவு செய்துள்ளோம்.
  கடந்த 2002, 2007, 2012 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பேரவைத் தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெற்றாலும், மொத்தமுள்ள 182 தொகுதிகளில் அதிகபட்சமாக 129 தொகுதிகளையே கைப்பற்றினோம்.
  ஆனால், இந்தமுறை 150 தொகுதிகளில் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார் அவர்.
  இதுகுறித்து குஜராத் மாநில பாஜக தலைவர் ஹர்ஷத் படேல் கூறியதாவது:
  பேரவைத் தேர்தலில் பாஜகவின் முகமாக இருக்கப்போவது யார் என்ற கேள்விக்கே இடமில்லை. அது சந்தேகமே இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடிதான்.
  மோடியின் புகழைப் பயன்படுத்தி, கட்சித் தலைவர் அமித் ஷாவின் வழிகாட்டுதலின் பேரில் தேர்தலை எதிர்கொள்வோம் என்றார் அவர்.
  குஜராத் மாநிலத்தில், படேல் சமூகத்தினர் போராட்டம், மாட்டுத் தோல் வைத்திருந்த தலித்துகள் தாக்கப்பட்ட சம்பவம், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பருவமழை பொய்த்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் போன்ற காரணங்களால் ஆளும் பாஜக மீது அதிருப்தி நிலவி வருவதாகக் கூறப்படுகிறது.
  நரேந்திர மோடி, அமித் ஷா ஆகிய மாநிலத் தலைவர்கள் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டது, மாநில பாஜக-வில் வசீகரம் மிக்க தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
  மேலும், தொடர்ந்து 22 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பதால், ஆளுங்கட்சி மீது பொதுமக்களுக்கு எழும் இயல்பான எதிர்ப்பலையும், எதிர்வரும் பேரவைத் தேர்தலில் பாஜவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
  இந்தச் சூழலில், நரேந்திர மோடியின் தலைமையிலான குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை முன்னிறுத்தி இந்தியா முழுவதும் தேர்தல்களை எதிர்கொண்டு வரும் பாஜக, குஜராத்தில் தோல்வியடைந்தால், அது அந்தக் கட்சிக்கு தேசிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai