சுடச்சுட

  

  தில்லியில் தமிழக விவசாயிகள் முழு நிர்வாணப் போராட்டம்

  By DIN  |   Published on : 10th April 2017 11:42 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  farmers-protest

  தில்லியில் பிரதமர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் நிர்வாண கோலத்தில் போராடும் தமிழக விவசாயிகள்.

  பிரதமரை சந்திக்க அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டதாகக் கூறி தில்லியில் அவரது அலுவலகம் எதிரே உள்ள சாலையில் தமிழக விவசாயிகள் மூன்று பேர் திடீரென முழு நிர்வாணத்துடன் தரையில் உருண்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  விவசாயிகளின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்; அனைத்து நதிகளை நீர்வழிப் பயணத் திட்டத்தின் மூலம் இணைக்க வேண்டும்; விவசாய விளை பொருள்களுக்கு லாபகர விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பி. அய்யாக்கண்ணு தலைமையில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஜந்தர் மந்தரில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் தொடர் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
  பிரதமர் அலுவலகம்: இந்நிலையில் 28-ஆவது நாளாக திங்கள்கிழமை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அய்யாக்கண்ணு உள்ளிட்ட 9 விவசாயிகளை பிரதமர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை நண்பகல் 12 மணியளவில் தில்லி காவல்துறையினர் தங்கள் வாகனங்களில் அழைத்துச் சென்றனர். அங்கு பிரதமர் அலுவலக வரவேற்பறைக்கு அய்யாக்கண்ணுவை மட்டும் அழைத்து சென்று அங்குள்ள அலுவலரிடம் கோரிக்கை மனுவை அளிக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.
  இதனால் பிரதமரை சந்திப்போம் என்ற எதிர்பார்ப்புடன் சென்ற விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் இருந்து மீண்டும் ஜந்தர் மந்தருக்கு விவசாயிகளை காவல்துறையினர் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
  அப்போது, குடியரசுத் தலைவர் மாளிகை பிரதான வாயில் அருகே உள்ள ராஜபாதையில் வாகனம் மெதுவாக திரும்பியபோது பழனிவேல் (59), ராமலிங்கம் (38), சரவணக்குமார் வாசுதேவன் (32) ஆகிய மூன்று விவசாயிகள் திடீரென வாகனத்தில் இருந்து குதித்தனர். கண் இமைக்கும் நேரத்தில் தங்களின் ஆடைகளை மூவரும் அவிழ்த்து முழு நிர்வாண கோலத்தில் ராஜபாதை சாலையில் ஓடினர்.
  "தமிழக விவசாயிகளை காப்பாற்று, இந்திய விவசாயிகளை காப்பாற்று' என அவர்கள் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மூவரையும் சமாதானப்படுத்தி வாகனத்தில் ஏற்றி ஜந்தர் மந்தர் பகுதியில் காவல்துறையினர் இறக்கி விட்டனர்.
  இது குறித்து பின்னர் பி. அய்யாக்கண்ணு செய்தியாளர்களிடம் கூறியது: தீவிரமாக போராடி வரும் எங்களை சந்திக்க தமிழக முதல்வர் தில்லிக்கு வந்திருக்க வேண்டும். 28 நாள்களாக வீதியிலேயே உண்டு, உறங்கி வருகிறோம். எங்களை பிரதமரிடம் அழைத்து செல்வதாக காவல்துறையினர் கூறியதால் உடன் சென்றோம். ஆனால் பிரதமரை சந்திக்க வைக்காமல் அங்குள்ள அலுவலக ஊழியரிடம் மனுவை அளிக்கச் செய்தனர்.
  பிரதமர் எங்களை சந்திக்க மறுப்பது ஜனநாயகத்தை கொலை செய்வதற்கு சமம். தமிழக விவசாயிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்திருந்தாலே போராட்டம் முடிவுக்கு வந்திருக்கும். விவசாய விளைப் பொருள்களின் விலையை நிர்ணயிப்பது யார்? விலைகளை நிர்ணயிப்பது தில்லியில் உள்ளவர்கள்தான் என்றார் அய்யாக்கண்ணு.
  திருச்சி சிவா சந்திப்பு: இந்நிலையில், விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் பற்றி தகவலறிந்ததும் மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா ஜந்தர் மந்தர் பகுதிக்கு வந்து விவசாயிகளுடன் பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக மாநில அரசு அறிவித்தால் அதை ஏற்றுக் கொண்டு தங்கள் போராட்டத்தை விவசாயிகள் கைவிட தயாராக உள்ளனர். தமிழக வீதிகளில் போராட்டம் நடத்த அனுமதி கிடைக்காது என்பதால்தான் மிகவும் பாதுகாப்பான சூழலில் தில்லியில் தங்கள் உணர்வுகளை விவசாயிகள் வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு மத்திய, மாநில அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai