சுடச்சுட

  

  நதி நீர்ப் பிரச்னையைத் தீர்க்க நடுவர் மன்றம்: மாநில மன்றக் கூட்டத்தில் பட்நாயக் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 10th April 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  naveen_patniak

  மாநிலங்களுக்கு இடையில் நிலவும் நதி நீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண நடுவர் மன்றத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் என்று ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் வலியுறுத்தினார்.
  மாநிலங்களிடை மன்றத்தின் நிலைக் குழுக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று நவீன் பட்நாயக் பேசுகையில், மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தார்.
  மன்றக் கூட்டத்தில் மகாநதி நீர் பங்கீட்டுப் பிரச்னை, போலாவரம் அணைத் திட்டம் உள்ளிட்ட விவகாரங்களை பட்நாயக் எழுப்பினார். ஆந்திர அரசு தன்னிச்சையாக மேற்கொண்டு வரும் போலவரம் நீர்ப்பாசனத் திட்டத்தை எதிர்த்துப் பேசிய பட்நாயக், மகாநதியின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் சத்தீஸ்கர் அரசு கட்டி வரும் தடுப்பணைப் பணிகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
  மேலும் இதுபோன்று மாநிலங்களுக்கு இடையே நீடிக்கும் நதி நீர்ப் பிரச்னைகளைத் தீர்த்துக்கொள்ள மத்திய அரசு உடனடியாக நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். கூட்டத்துக்குப் பின் அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது: ஒடிஸாவுக்கு பாதகத்தை விளைவிக்கும் போலாவரம் அணைத் திட்டத்தை ஆந்திரம் செயல்படுத்தி வருகிறது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் இடைக்காலத் தீர்வாக சத்தீஸ்கர் அரசு மேற்கொண்டிருக்கும் அனைத்துக் கட்டுமானங்களையும் மத்திய அரசு தடுக்க வேண்டும். உடனடியாக மகாநதி நதி நீர் பங்கீட்டுக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும்.
  மாநில ஆளுநரின் பங்கு குறித்த தெளிவான விளக்கம், மாநிலங்களின் தன்னாட்சியைப் பலப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் பஞ்ச்சி குழு அளித்திருக்கும் பரிந்துரைகளை ஒடிஸா அரசு ஆதரிக்கிறது. மாநிலத்தில் மொத்த மக்கள்தொகையில் 5 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளனர். இதனடிப்படையில் வட கிழக்கு இமாலய மாநிலங்களுக்கு கடைபிடிக்கப்படும் நிதிப் பங்கீட்டு நடைமுறையைத்தான் ஒடிஸாவுக்கும் பின்பற்ற வேண்டும் என மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  மேலும் சுரங்கங்களின் மீது மத்திய அரசு வசூலிக்கும் தூய்மை சூழல் வரியில் 60 சதவீதத் தொகையை நிலக்கரி வளமுள்ள மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
  மாநிலத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. கிராம ஊராட்சிகளில் வங்கி வசதி கிடையாது. வங்கிக் கடன் வசதியும் மக்களுக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. இந்த பிரச்னைகளைக் களையக் கோரியும் வலியுறுத்தப்பட்டது.
  மேலும் நக்ஸல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மத்திய பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்படுகின்றனர். அப்படி படைப் பிரிவுகளை நிறுத்துவதற்கான செலவை திரும்பத் தருமாறு கோருவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று நவீன் பட்நாயக் கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai