சுடச்சுட

  

  "மன நோயாளிகள் தற்கொலைக்கு முயன்றால் தண்டனைக்குரிய குற்றமாகாது'

  By DIN  |   Published on : 10th April 2017 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  treat

   

  மத்திய அரசு இயற்றியுள்ள புதிய மனநல மருத்துவச் சட்டத்தில், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்றால் அது தண்டனைக்குரிய குற்றமாகாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
  நாடெங்கிலும் உள்ள பல்வேறு மனநலக் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகள் துன்புறுத்தப்படுவதாகவும், மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் பரவலாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
  இதுதொடர்பாக பல்வேறு தன்னார்வ அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
  இந்தச் சூழலில், மன நோயாளிகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான "மனநல மருத்துவ மசோதா 2017', நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் ஏகமனதாக நிறைவேறியது.
  அதன் தொடர்ச்சியாக, அந்தப் புதியச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கினார்.
  அந்தச் சட்டத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயல்வதை தண்டனைக்குரிய குற்றமாகக் கருத முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  தற்போதைய இந்திய தண்டனைச் சட்டம், 309-ஆவது பிரிவின்படி, தற்கொலைக்கு முயல்பவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி, ஓராண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கலாம்.
  எனினும், புதிய மனநல மருத்துவச் சட்டத்தில், மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 309-ஆம் பிரிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
  தற்போது நடைமுறையிலிருக்கும் 1987-ஆம் ஆண்டு மனநல மருத்துவச் சட்டத்துக்குப் பதிலாக இயற்றப்பட்டுள்ள இந்தப் இந்தப் புதியச் சட்டத்தை மனநல மருத்துவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் வரவேற்
  றுள்ளனர்.

  புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்கள்

  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலைக்கு முயன்றால் அது தண்டனைக்குரிய குற்றம் அல்ல.
  மனநலக் காப்பகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் நோயாளிகளை எந்த வகையிலும் சங்கிலியால் பிணைத்து வைக்கக் கூடாது.
  மன நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் மின்னதிர்வு சிகிச்சை, தசைத் தளர்வு சிகிச்சை ஆகியவற்றை மேற்கொள்ளக் கூடாது.
  சிறார்கள் மற்றும் குழந்தைகளுக்கு மின்னதிர்வு சிகிச்சை அளிக்கக் கூடாது.
  மன நல பாதிப்புகளுக்கு மருத்துவக் காப்பீடு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai