சுடச்சுட

  

  ம.பி. இடைத் தேர்தலில் வன்முறை: இரு இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு

  By DIN  |   Published on : 10th April 2017 12:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்தியப் பிரதேசத்தில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் வன்முறை வெடித்ததால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
  மத்தியப் பிரதேசத்தில் அதேர், பாந்தவ்கர் ஆகி இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இங்கு பாஜக-காங்கிரஸ் வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. அதேர் தொகுதி பதற்றம் நிறைந்ததாக அறிவிக்கப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில், அதேர் தொகுதியில் வாக்குப் பதிவின்போது இரு இடங்களில் பாஜக-காங்கிரஸ் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
  நிலைமை கையை மீறிச் சென்றதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டும் வன்முறைக் கும்பலைக் கலைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வன்முறை நிகழ்ந்த பகுதிக்கு கூடுதலாக பாதுகாப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
  எனினும், எந்த இடத்திலும் வன்முறையாளர்கள் வாக்குப்பதிவு மையத்தைக் கைப்பற்றவில்லை என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  அதேர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாக்குச்சாவடிக்குள் சென்று நீண்ட நேரமாக அங்கேயே இருந்துள்ளார். இதற்கு பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் எதிர்ப்புத் தெரிவித்தார். இதனால், இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது, இதுவே வன்முறையாக வெடித்தது என்று கூறப்படுகிறது. முன்னதாக, காங்கிரஸ் தரப்பு அளித்த புகாரின் பேரில் தேர்தலுக்கு முன்பு 6 காவல் துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
  அதேர் தொகுதியில் 60 சதவீத வாக்குகளும், பாந்தவ்கர் தொகுதியில் 65 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. இரு தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் வரும் 13-ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai