சுடச்சுட

  

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரித்த நிறுவனங்களால் கூட முறைகேடு செய்ய முடியாது

  By DIN  |   Published on : 10th April 2017 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  By-election-in-RK-Nagar

  "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வலிமையானவை. அவை முறைகேடுகள் செய்ய முடியாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தயாரித்த நிறுவனங்களால் கூட முறைகேடுகளைச் செய்ய முடியாது' என்று தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
  உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின. இதேபோல், காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளும் இந்த இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பியிருந்தன. அவற்றுக்கு பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் அண்மையில் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டிருந்தது.
  இந்நிலையில், அந்த இயந்திரங்கள் குறித்த தனது கருத்துகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்கும் வகையில் இது தொடர்பாக அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
  வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா? என்பதே முக்கியமான கேள்வியாகும். அவற்றில் முறைகேடு செய்ய முடியாது என்பதே எங்களது பதிலாகும்.
  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல் மாதிரியானது (மாடல் 1) கடந்த 2006 வரை தயாரிக்கப்பட்டன. சில ஆர்வலர்கள் கூறுவதுபோல் அவற்றில் முறைகேடுகள் எதையும் செய்ய முடியாது.
  கடந்த 2006-க்குப் பிறகும், 2012 வரையிலும் தயாரிக்கப்பட்ட இரண்டாவது மாதிரி (மாடல் 2) வகை இயந்திரங்களில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. அவற்றில் முறைகேடு செய்யும் நோக்குடன் பொத்தான்கள் அழுத்தப்பட்டிருந்தால் அதைக் கண்டறியும் வசதியும் இடம்பெற்றது.
  மேலும், பொதுத்துறை நிறுவனமான எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (இசிஐ) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மின்னணு இயந்திரங்கள் கணினியால் கட்டுப்படுத்தப்படுவது இல்லை. தனித்தனி இயந்திரங்களான அவை இணையதளம் அல்லது எந்தவொரு நெட்வொர்க்குடனும் இணைக்கப்படுவதில்லை.
  எனவே, தொலைவில் இருந்து இயக்கக்கூடிய எந்தவொரு சாதனத்தாலும் இந்த இயந்திரங்களில் ஊடுருவி முறைகேடு செய்யும் வாய்ப்பே இல்லை. அதேபோல் அலைவரிசைகளை கவர்ந்திழுக்கும் சாதனமோ, ஒயர்லெஸ் முறையில் இயங்கும் கருவிகளோ இந்த இயந்திரங்களில் இல்லை. அதேபோல் வெளியில் இருந்து இந்த இயந்திரங்களில் எந்தக் கருவியையும் பொருத்த முடியாது. எனவே அவற்றில் முறைகேடு செய்யவே முடியாது.
  மின்னணு இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனத்தாலும் அவற்றில் முறைகேடுகளைச் செய்ய சாத்தியமே இல்லை. கடந்த 2006-இல் இருந்து இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அவற்றைத் தயாரித்த பொதுத்துறை நிறுவனங்களான இசிஐஎல் மற்றும் பெல் ஆகியவற்றுக்கு எந்தத் தொகுதியில் எந்த வேட்பாளர் போட்டியிடுகிறார் என்பதோ, வாக்குப்பதிவு இயந்திரத்தில் எந்த இடத்தில் எந்த வேட்பாளரின் சின்னம் இடம்பெறும் என்பதோ சில ஆண்டுகளுக்கு முன்பே (தயாரிக்கப்பட்ட காலகட்டம்) தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai