சுடச்சுட

  

  வெளிநாடுகளுக்கு கூரியர் மூலம் அனுப்பப்படும் செல்லாத நோட்டுகள்: நூதன மோசடி அம்பலம்

  By DIN  |   Published on : 10th April 2017 04:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  oldrupees

  இந்தியாவில் செல்லாததாக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் கூரியர் மூலம் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  இந்த ரூபாய் நோட்டுகளை அங்கிருப்பவர்கள் மூலமாக வங்கிகளில் டெபாசிட் செய்ய வைத்து புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றுவதற்காக இத்தகைய செயல்கள் நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி அறிவித்தது. மேலும், இந்தப் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதேநேரத்தில், வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு இதற்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
  இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிநாடுகளுக்கு அதிக அளவிலான பார்சல்கள் கூரியர் மூலம் அனுப்பப்பட்டு வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். பின்னர், சந்தேகத்தின் பேரில் அவ்வாறு அனுப்பப்படும் பார்சல்களை அண்மையில் சோதனை செய்தனர்.
  அப்போது அந்த பார்சல்களில் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. இந்த ரூபாய் நோட்டுகள், வெளிநாடுகளில் உள்ள தங்கள் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ சம்பந்தப்பட்டவர்கள் அனுப்புவதும், பின்னர் அவர்கள் இந்தியாவுக்கு வந்து அந்தப் பணத்தை வங்கிகளில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொடுப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டதாக சுங்கத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும், இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai