சுடச்சுட

    

    3 ஆண்டு சாதனைப் பட்டியல்: அமைச்சர்களுக்கு மத்திய அரசு உத்தரவு

    By DIN  |   Published on : 10th April 2017 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அமைச்சர்கள் அனைவரும், கடந்த 3 ஆண்டுகளில் தாங்கள் செயல்படுத்திய பணிகள் குறித்த சாதனைப் பட்டியலை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, இந்த தகவலை மத்திய அரசு கேட்டுள்ளது.
    மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 26-ஆம் தேதி பதவியேற்றது.
    அதன்படி, வரும் மே மாதம் 26-ஆம் தேதியுடன் மத்திய அரசு பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ளது.
    இதற்கு முன்னதாக, கடந்த 3 ஆண்டுகாலத்தில் பல்வேறு மத்திய அமைச்சகங்களும் செயல்படுத்திய திட்டங்கள் குறித்த சாதனைப் பட்டியலை வெளியிட மத்திய அரசு விரும்புகிறது.
    இதையொட்டி, மத்திய அமைச்சர்களிடம் அவர்களது சாதனைப் பணிகள் குறித்த பட்டியலை மத்திய அரசு கேட்டுள்ளது.
    இதுதொடர்பாக மத்திய அமைச்சர்கள் அனைவருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடந்த மாதம் 21-ஆம் தேதியன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
    அந்த கடிதத்தில், மத்திய அமைச்சர்கள் அனைவரும் பொது மக்கள் பயனடையும் வகையில் தாங்கள் செயல்படுத்திய திட்டங்கள் குறித்த பட்டியலை அளிக்க வேண்டும் என்றும், அவர்களது அமைச்சகங்கள் செயல்படுத்திய சாதனைப் பணிகளில் குறைந்தது 5 சாதனைப் பணிகள் குறித்தாவது தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
    அதேபோல், மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்த
    புள்ளி விவரம், நாடு முழுவதும் பாஜக அரசு பதவியேற்ற பிறகு, வீடுகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சமையல் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் குறித்தும்
    தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டுள்ளார்.
    மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசால் ஏற்படுத்தப்பட்ட சாதகமான மாற்றங்கள் குறித்து பொது மக்களிடம் மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai