சுடச்சுட

  

  ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது: மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 11th April 2017 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Aadhar

  மானியங்கள் பெறுவது தவிர பிற நடைமுறைகளுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை வலியுறுத்தின.
  ஆதார் அட்டை தொடர்பான விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசியதாவது: அரசின் மானியங்களைப் பெறுவது தவிர பிற விஷயங்களுக்கு ஆதார் அட்டையை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி பல்வேறு விஷயங்களுக்கு ஆதார் எண் கண்டிப்பாக வேண்டுமென்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆதாரைக் கட்டாயமாக்கி பல மானியங்களை உரியவர்களுக்கு கிடைக்கவிடாமல் செய்துவிட்டு, பணத்தை மிச்சப்படுத்திவிட்டதாக பெருமை பேசுவதில் பயன் ஏதுமில்லை.
  மேலும், ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தியதால் சமையல் எரிவாயு மானியத்தில் செலவு குறையவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால்தான் அரசின் மானியச் செலவு குறைந்துள்ளது என்று தலைமைக் கணக்குத் தணிக்கை அமைப்பின் (சிஏஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
  ஆதார் அட்டையைக் கட்டாயப்படுத்தியதால் ராஜஸ்தானில் 26 சதவீத பயனாளிகளால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உணவு தானியங்களைப் பெற முடியவில்லை. இதனால் பணத்தைச் சேமித்தோம் என்று கூற முடியாது. உண்மையான பயனாளிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதுதான் உண்மை.
  தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றி வருபவர்களிடம் ஆதாரைக் கட்டாயமாக வாங்க வேண்டுமென்று கூறியுள்ளதால் கர்நாடகத்தில் மட்டும் ரூ.10 கோடி முதல் ரூ.20 கோடி பணம் உரியவர்களுக்கு அளிக்கப்படாமல் உள்ளது. இதேபோல நிலைமைதான் ஓய்வூதியப் பயனாளிகளுக்கும் உள்ளது. உச்ச நீதிமன்றம் இதற்கு சரியான தீர்வை வழங்கும் என்று நம்புகிறேன் என்றார் ஜெய்ராம் ரமேஷ்.
  திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. நாராயணன் உள்ளிட்டோரும் ஆதார் அட்டையை அனைத்து விஷயங்களுக்கும் கட்டாயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசினர்.
  இதற்கு பதிலளித்துப் பேசிய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதால் ஏழை, எளிய மக்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. மானியம் பெறுவதற்கான அவர்களது உரிமை ஆதார் அட்டையால் பாதிக்கப்படாது' என்று உறுதியளித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai