சுடச்சுட

  

  கருப்புப் பணத்துக்கு எதிரான போர் ஒரே நடவடிக்கையில் முடிவடையாது

  By DIN  |   Published on : 11th April 2017 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  venkiah

  கருப்புப் பணத்துக்கு எதிரான போர் ஒரே நடவடிக்கையில் முடிவடைந்துவிடாது; மத்திய அரசு தொடர்ந்து கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
  முன்னதாக, ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை சுட்டிக்காட்டிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், "ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் கருப்புப் பணத்தை ஒழித்துவிட்டதாக பிரதமர் மோடி கூறினார்; அப்படி என்றால் ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது கணக்கில் காட்டப்பட்ட பணம்தானா?' என்று சுட்டுரையில் (டுவிட்டர்) கேள்வி எழுப்பியிருந்தார்.
  இந்நிலையில், தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
  ஆர்.கே.நகரில் இடைத் தேர்தலை ரத்து செய்தது சரியான நடவடிக்கை. அங்கு கருப்புப் பணத்தை பயன்படுத்தி வாக்காளர்களை விலைக்கு வாங்க முயன்றுள்ளனர். முன்பு மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியால் பல ஊழல்கள் நிகழ்த்தப்பட்டு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு கருப்புப் பணம் உருவாகியுள்ளது.
  பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்புப் பணத்துக்கு எதிரான போரைத் தொடுத்துள்ளது. இந்த போர் ஒரே நடவடிக்கையில் முடிந்து விடாது. கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காக தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளும்.
  பழைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்றதும், புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியதும் இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான்.
  தேர்தல் ஆணையம் உரிய விசாரணைகளை மேற்கொண்டுதான் ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜனநாயக நலன் கருதி தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு அரசியல் காரணம் கற்பிக்கும் கட்சிகளை புறந்தள்ள வேண்டும். ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்கப்பட்டது, விடியோவாகவே வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருமான வரித் துறையினர் தங்கள் கடமையைச் செய்துள்ளனர். அதற்கு அரசியல் கட்சிகள் தங்கள் பாணியில் கருத்துத் தெரிவித்து வருகின்றன.
  தேர்தலில் தோல்வியடைந்த எதிர்க்கட்சியினர் தோல்வியை மறைக்க மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர். மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நிகழ்த்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவாகக் கூறிவிட்டது. பஞ்சாப், தில்லி, பிகாரில் பாஜக தோல்வியடைந்தபோது எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சியடைந்தன. இப்போது, தோல்வியை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.
  இந்தியாவில் கருப்புப் பணம் எவ்வாறு உருவானது என்பதை ப.சிதம்பரத்தைத் தவிர வேறு யாராலும் விளக்கமாகக் கூற முடியாது. ஏனெனில், அவர்களது காங்கிரஸ் கட்சி ஆட்சியில்தான் கருப்புப் பணம் உருவானது. 2ஜி, 3ஜி, காமன்வெல்த் ஊழல்கள், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு, நிலக்கரிச் சுரங்க முறைகேடு என அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றவைதாம் என்றார் வெங்கய்ய நாயுடு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai