சுடச்சுட

  

  காமன்வெல்த் போட்டி முறைகேட்டில் மன்மோகனுக்குத் தொடர்பில்லை: பிஏசி

  By DIN  |   Published on : 11th April 2017 11:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற முறைகேடு விவகாரத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு (பிஏசி) தெரிவித்துள்ளது.
  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஷீலா தீட்சித், தில்லி முதல்வராக இருந்தபோது அங்கு 2010-ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிக்கான ஏற்பாடுகளில் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் ஷீலா தீட்சித், இப்போட்டிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், காங்கிரஸ் பிரமுகருமான சுரேஷ் கல்மாதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வழக்கில் கல்மாதி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
  இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தலைமைத் கணக்குத் தணிக்கை அமைப்பு (சிஏஜி) சமர்ப்பித்த அறிக்கையை நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு ஆய்வு செய்து வந்தது. அந்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (ஏப். 12) தாக்கல் செய்யப்பட உள்ளது.
  இந்நிலையில், பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் கே.வி.தாமஸ், தில்லியில் நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற முறைகேடுகளில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கோ, பிரதமர் அலுவலகத்துக்கோ தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும் பிஏசி கண்டறியவில்லை.
  எங்கள் குழுவின் முழு அறிக்கையையும் நீங்கள் புதன்கிழமை காணலாம். அறிக்கையில் அப்போதைய பிரதமருக்கு எதிராக எதுவுமே இல்லை என்பது ஒரு முக்கியமான அம்சம். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக அப்போதைய பிரதமர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகள் (மினிட்ஸ்) வெளிவந்தன. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் உணர்வானது அந்தக் குறிப்புகளில் இடம்பெறவில்லை என்று விளையாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
  பொதுக் கணக்குக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டவைதான். ஏனெனில், மொத்தம் 24 உறுப்பினர்கள் அடங்கிய இக்குழுவில் 12 பேர் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, 4 பேர் மட்டுமே காங்கிரûஸச் சேர்ந்தவர்கள் ஆவர்.
  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி தொடர்பான பிஏசி-யின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு எங்கள் குழுவின் பரிசீலனையில் ஏராளமான அறிக்கைகள் இருந்ததுதான் காரணம் என்றார் அவர்.
  கே.வி.தாமஸ் தலைமையிலான பொதுக் கணக்குக் குழுவானது கடந்த மூன்று ஆண்டுகளில் 73 அறிக்கைகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. 74-ஆவது அறிக்கையை (காமன்வெல்த் போட்டிகள் தொடர்பானது) அக்குழு புதன்கிழமை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai