சுடச்சுட

  

  சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம்

  By DIN  |   Published on : 11th April 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sc

  சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அறிவித்து ரத்து செய்யக் கோரிய பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
  இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாதத்தைத் தூண்டிவிடுவதை அடுத்து இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை ஏன் அளிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பப்பட்டது. முக்கியமாக உரி தாக்குதலை அடுத்து இந்தக் கோரிக்கை வலுவடைந்தது.
  இதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் பிரதமர் மோடி தலைமையில் சிந்து நதி நீர் பங்கீட்டு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி பாகிஸ்தானுக்கு எவ்வளவு நீர் அளிக்க வேண்டுமோ அதை மட்டுமே இனி அளிப்போம். கூடுதலாக உள்ள நீரை இந்தியா முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
  இந்நிலையில், வழக்குரைஞர் எம்.எல். சர்மா என்பவர், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், இந்த நதி நீர் பகிர்வு என்பது குடியரசுத் தலைவரின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சட்டப்பூர்வ ஒப்பந்தம் அல்ல. மூன்று தலைவர்கள் சேர்ந்து மேற்கொண்ட உடன்பாடுதான். எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அப்போது மறுத்துவிட்டது. இந்நிலையில், அந்த பொதுநல மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
  அப்போது நீதிபதிகள் கூறியதாவது: 1960-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் யாருக்கும் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. இது தொடர்பான மனுதாரரின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
  சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் 1960-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு, பாகிஸ்தான் அதிபராக இருந்த அயூப்கான் மற்றும் உலக வங்கித் தலைவர் வில்லியம் இல்லிஃப் ஆகியோர் இடையே மேற்கொள்ளப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai