சுடச்சுட

  
  loksabha

  மக்களவையில் திங்கள்கிழமை அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள்.

  தென் மாநிலங்களில் வசிப்போரை "கருப்பர்கள்' என சர்ச்சைக்குரிய வார்த்தையுடன் பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் அடையாளப்படுத்திய விவகாரத்தில் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.
  மக்களவை அதன் தலைவர் சுமித்ரா மகாஜன் தலைமையில் திங்கள்கிழமை காலை கூடியது.
  அப்போது கேள்வி நேரம் தொடங்கியதும் கேரளத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து தருண் விஜய் விவகாரத்தை எழுப்பினர். இதையடுத்து, அவை நடவடிக்கையை 10 நிமிடங்களுக்கு சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.
  பின்னர் அவையில் கேள்வி நேரம் முடிந்த பிறகு மீண்டும் தருண் விஜய் விவகாரத்தை காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து சுமித்ரா மகாஜன் அனுமதியுடன் காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:
  தில்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் நைஜீரியர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக வெளிநாட்டு தொலைக்காட்சி விவாத நேர்காணலின்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை தருண் விஜய் வெளியிட்டுள்ளார்.
  தமிழகம், கர்நாடகம், கேரளம் போன்ற தென் மாநிலங்களில் உள்ள கறுப்பர்களுடன் நாங்கள் வசிக்கவில்லையா? நாங்கள் நிற வெறி பிடித்தவர்கள் இல்லை என அவர் பேசினார்.
  அப்படி என்றால் தென்னிந்தியாவைச் சேர்ந்த நாங்கள் எல்லாம் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் இல்லையா? தருண் விஜய் ஒன்றும் சாதாரண நபர் கிடையாது.
  நாட்டின் ஒற்றுமைக்கு அவரது கருத்து அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அவர் மீது சட்டப்படி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மல்லிகார்ஜுன கார்கே.
  அவரது கோரிக்கைக்கு கேரளம், கர்நாடகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
  முன்னதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், "நாம் அனைவரும் இந்தியராக திகழ்கிறோம். நிறத்தின் பெயரால் மத்தியில் ஆளும் அரசு பிரிவினையைத் தூண்டுவதாகக் கூறி, காங்கிரஸ் உறுப்பினர்கள் பிரச்னை செய்யக்கூடாது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளிக்க தயாராக உள்ளார்' என்றார்.
  இருப்பினும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் நண்பகல் 12 மணிக்கு பிறகு முதலில் 20 நிமிடங்களுக்கும் பின்னர் பிற்பகல் 1.50 மணிக்கு சில நிமிடங்களும் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவையிலும் இதே விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அங்கும் அவை அலுவல்கள் சில நிமிடங்கள் தடைபட்டன.


  நிறப் பிரிவினையை நாடு சகித்து கொள்ளாது: ராஜ்நாத் சிங் உறுதி


  நிறப் பிரிவினையை நாடு சகித்துக் கொள்ளாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதியளித்தார்.
  பாஜக முன்னாள் எம்.பி. தருண் விஜய் தெரிவித்துள்ள கருத்து தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்னை எழுப்பினர். இதற்கு பதிலளித்து ராஜ்நாத் சிங் மக்களவையில் பிற்பகலில் பேசியதாவது:
  தமிழகத்தின் தத்துப் பிள்ளை என தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தருண் விஜய். திருவள்ளுவருக்காகவும் திருக்குறளை வட மாநிலங்களில் பரப்புவதற்காகவும் பல முயற்சிகளை முன்னெடுத்தவர் அவர். தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது எனக் கூறி அவரே வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரியுள்ளார். நிறத்தின் பெயரால் செய்யப்படும் பிரிவினையை நாடு சகித்துக் கொள்ளாது. ஆனால், தருண் விஜய் விவகாரத்தை திரித்து பொருள்பட்டு தவறாகக் கருதக் கூடாது. சம்பந்தப்பட்ட நபரே வருத்தம் தெரிவித்து விட்டதால் இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்றார் ராஜ்நாத் சிங்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai