சுடச்சுட

  

  தில்லியில் தமிழக விவசாயிகளுடன் மண் சோறு சாப்பிட்டார் பிரேமலதா

  By DIN  |   Published on : 11th April 2017 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vijayakanthwifewithfarmers

  தில்லி ஜந்தர் மந்தரில் செவ்வாய்க்கிழமை தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடன் சேர்ந்து மண் சோறு சாப்பிடும் பிரேமலதா.

  தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளுடன் சாலையில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்டு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் ஆதரவை அக்கட்சியின் மூத்த தலைவர் பிரேமலதா தெரிவித்தார்.
  தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, தேசிய நதிகளை இணைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தில்லியில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி முதல் தமிழகத்தைச் சேர்ந்த தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
  போராட்டம் தீவிரம்: இந்நிலையில், போராட்டக் குழுவைச் சேர்ந்த விவசாயிகளில் மூன்று பேர் திங்கள்கிழமை (ஏப்ரல் 10) பிரதமர் அலுவலகம் அருகே முழு நிர்வாணத்துடன் ஓடி பரபரப்பை ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து, விவசாயிகள் 29-ஆவது நாளாக தங்கள் போராட்டத்தை ஜந்தர் மந்தர் பகுதியில் மேற்கொண்டனர்.
  இதையொட்டி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவியும் அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான பிரேமலதா தில்லி ஜந்தர் மந்தர் பகுதிக்கு செவ்வாய்க்கிழமை நேரில் வந்து ஆதரவு தெரிவித்தார். அப்போது சாலையில் அமர்ந்து மண் சோறு சாப்பிட்ட விவசாயிகளுடன் பிரேமலதாவும் மண் சோறு சாப்பிட்டார்.
  கோரிக்கை: பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா பேசியது: நானும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள் என்ற முறையில் விவசாயிகளின் வேதனை, கவலை, வலிகளை உணர்ந்துள்ளேன். விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவை. அவற்றை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியைச் சமாளிக்கக் கூடிய திறன் வாய்ந்த அரசு மாநிலத்தில் இல்லை. இத்தருணத்தில் ஏரி, குளங்களை இப்போதே தூர் வாரினால்தான் வரும் மழைக்காலத்திலாவது தண்ணீரைச் சேமிக்க முடியும். தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் இணைக்கப்பட்டது போல நதிகளை இணைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தில்லியில் விவசாயிகள் திங்கள்கிழமை நடத்திய முழு நிர்வாணப் போராட்டம் தனிப்பட்ட விவசாயிக்கு மட்டுமின்றி ஒவ்வாரு தமிழருக்கும் நேர்ந்த அவமானமாகக் கருத வேண்டும் என்றார் பிரேமலதா.
  பொன்னாருடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய சாலை, நெடுஞ்சாலை போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை தில்லியில் பிரேமலதா சந்தித்துப் பேசினார். விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு அவரிடம் பிரேமலதா கேட்டுக் கொண்டார். இதையடுத்து, பொன்.ராதாகிருஷ்ணனை அய்யாக்கண்ணு குழுவினரும் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினர். இருப்பினும் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அய்யாக்கண்ணு திட்டவட்டமாகக் கூறினார்.

  போராட்டத்தை பலவீனப்படுத்த காவல் துறை திட்டம்!

  தில்லி ஜந்தர் மந்தரில் விவசாயிகளின் தொடர் போராட்டத்தை பலவீனப்படுத்த நகர காவல் துறை திட்டமிட்டுள்ளது.
  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் புதன்கிழமை (ஏப்ரல் 12) நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, ஜந்தர் மந்தர் பகுதியில் இருந்து விவசாயிகளை அப்புறப்படுத்த காவல் துறைக்கு அதன் மேலிடம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
  தில்லியில் திங்கள்கிழமை பிரதமர் அலுவலகம் அருகே மூன்று விவசாயிகள் முழு நிர்வாண கோலத்தில் ஓடினர். அவர்களைக் கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளது. இதை அறிந்த மூன்று விவசாயிகளும் செவ்வாய்க்கிழமை ஜந்தர் மந்தர் பகுதிக்கு வரவில்லை.
  இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை பலவீனப்படுத்தும் வகையில், அதில் முக்கியமான நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai