சுடச்சுட

  

  பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்: இந்தியா - ஆஸ்திரேலியா கையெழுத்து

  By DIN  |   Published on : 11th April 2017 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agreement1

  தில்லியில் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல்.

  இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது உள்பட 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
  இந்தியாவில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல், தில்லிக்கு திங்கள்கிழமை வருகைத் தந்தார். 2015-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியப் பிரதமராக பொறுப்பேற்ற மால்கம் டர்ன்புல், இந்தியாவுக்கு வருகை தருவது இதுவே முதன்முறையாகும். தில்லி விமான நிலையத்தில் அவருக்கு இந்திய அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
  இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் டர்ன்புல் சந்தித்தார். அப்போது, இரு நாட்டு உறவுகள் குறித்து மோடியும், டர்ன்புல்லும் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 6 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
  இரு நாடுகள் இடையேயான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது தொடர்பான ஒப்பந்தம் அவற்றில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதுதவிர, சுகாதாரம், விளையாட்டு, சுற்றுச்சூழல், பருவநிலை, உள்நாட்டு விமானப் போக்குவரத்து பாதுகாப்பு, விண்வெளித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
  இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உறவில் இந்த நாள் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். ஆஸ்திரேலிய பிரதமர் மால்கோம் டர்ன்புல் உடனான சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான உறவினை ஒரு புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.
  இரு நாடுகளுக்கு இடையேயான உறவைப் பலப்படுத்துவதற்கு பல்வேறு தொலைநோக்கு முடிவுகளை நாங்கள் எடுத்திருக்கிறோம். குறிப்பாக, இரு நாடுகள் இடையே விரிவான பொருளாதார ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையை விரைவில் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
  இவை அனைத்துக்கும் மேலாக, பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவதற்கு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் உறுதிபூண்டிருக்கின்றன. இதற்காக, இரு நாடுகள் இடையே பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் புதிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.
  இந்தியா, ஆஸ்திரேலியா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்துமே பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை பூண்டோடு அழிக்க வேண்டியது அவசியம். இதற்கு அனைத்து நாடுகளும் ஓரணியில் திரள வேண்டும். ஆனால், இன்னமும் சில நாடுகள் பயங்கரவாதத்துக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவளித்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. முதலில் அதுபோன்ற நாடுகளை அடையாளம் கண்டு அவற்றை தனிமைப்படுத்த வேண்டும்.
  பயங்கரவாதத்துக்கு எதிராக போராடும் வகையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் உளவுத்துறை, பாதுகாப்புத் துறை ஆகியவற்றுக்கு இடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
  இந்தியாவுக்கு உற்ற தோழனாகவும், நீண்டகால கூட்டாளியாகவும் ஆஸ்திரேலியா விளங்கி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது இந்தியாவுக்கு யுரேனியத்தை ஏற்றுமதி செய்ய ஆஸ்திரேலியா ஒப்புக்கொண்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படும். இதற்காக ஆஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.
  இதையடுத்து, ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் பேசியதாவது: உலக அரங்கில் போற்றத்தக்க வகையில் அளப்பரிய சாதனைகளை இந்தியா நிகழ்த்தி வருகிறது. அதற்கு பிரதமர் மோடியின் தொலைநோக்கு திட்டங்களும் முக்கிய காரணம். இதற்கு முன்பு இந்தியாவுடன் இருந்ததைக் காட்டிலும் மேலும் நெருக்கமான உறவினைப் பேண ஆஸ்திரேலிய மக்கள் விரும்புகிறார்கள் என்றார் அவர்.
  மெட்ரோ ரயிலில் பயணம்: இதனிடையே, இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தில்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு இரு நாட்டுத் தலைவர்களும் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai