சுடச்சுட

  

  பிரதமருடன் மம்தா சந்திப்பு: ரூ.10,000 கோடி நிதி வழங்க கோரிக்கை

  By DIN  |   Published on : 11th April 2017 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mamta

  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லியில் பிரதமர் மோடியை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது மேற்கு வங்கத்துக்கு வழங்க வேண்டிய ரூ.10,000 கோடி மத்திய அரசு நிதியை விரைவில் ஒதுக்கீடு செய்யுமாறு அவர் வலியுறுத்தினார்.

  சுமார் அரை மணி நேரம் நீடித்த இச்சந்திப்பில் மத்திய அரசின் திட்டங்களை மாநிலத்தில் செயல்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது. அரசியல் அரங்கில் எதிரும், புதிருமாக உள்ள பிரதமரும், மம்தாவும் நிர்வாகரீதியாக ஏற்கெனவே பல முறை சந்தித்துப் பேசியிருப்பது நினைவுகூரத்தக்கது.
  தில்லியில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் கேஜரிவால் உள்பட பல்வேறு தலைவர்களை இரு நாள்களுக்கு முன்பு சந்தித்தார். இந்நிலையில், பிரதமர் மோடியை திங்கள்கிழமை சந்தித்த அவர், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேசினார். ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், தூய்மை இந்தியா, உணவு தானியங்களுக்கான மானியம் உள்ளிட்ட மத்திய அரசுத் திட்டங்களை மேற்கு வங்கத்தில் செயல்படுத்துவதற்கு ரூ.10,469 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அப்போது தெரிவித்த மம்தா, அந்தத் தொகையை விரைவில் வழங்கக் கோரி பிரதமரிடம் வலியுறுத்தினார்.
  அதேவேளையில் இச்சந்திப்பின்போது, தீஸ்தா நதிநீர்ப் பகிர்வு தொடர்பாக பிரதமரிடம் எதுவும் விவாதிக்கவில்லை என்று மம்தா பானர்ஜி பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதால் அதற்கு பதிலாக பழைய வாக்குச் சீட்டு முறையையே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
  எதிர்க்கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு: இதைத் தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆஸாத், அகமது படேல் ஆகியோரை மம்தா சந்தித்துப் பேசினார். ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் பிரஃபுல் படேல் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai