சுடச்சுட

    

    பெல்லட் குண்டு விவகாரம்: காஷ்மீர் பார் கவுன்சிலின் கருத்தறிய உச்ச நீதிமன்றம் முடிவு

    By DIN  |   Published on : 11th April 2017 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில், அந்த மாநில பார் கவுன்சிலின் (வழக்குரைஞர்கள் சங்கம்) கருத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுள்ளது.
    இதுதொடர்பாக இரு வாரங்களுக்குள் ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் அளிக்க வேண்டும் என்று அந்த மாநில பார் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்துவது சமீபகாலமாக தொடர் கதையாகி வருகிறது. நிலைமையைக் கட்டுப்படுத்த பெல்லட் குண்டுகளை (உடலுக்குள் ஊடுருவாத சிறிய இரும்பு குண்டுகள்) கொண்டு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர்.
    இதில் பலருக்கு பார்வை இழப்பு ஏற்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு பலத்த காயம் ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பெல்லட் குண்டுகளுக்கு மாற்று வழியைக் கண்டறியுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. மிளகாய்ப் பொடியைக் கொண்டு தயாரிக்கப்படும் குண்டுகளைப் பயன்படுத்துவது தொடர்பாகவும் பல்வேறு பரிசீலனைகள் வழங்கப்பட்டன.
    இருப்பினும், முழுமையாக பெல்லட் குண்டுகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக இருந்து வருகிறது. இந்நிலையில், இதுதொடர்பான மனு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே.கெளல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகி வாதிடுகையில், "வரும் காலங்களில் பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதைக் குறைக்க முயற்சி செய்கிறோம்' என்றார்.
    அதற்கு எதிராகக் கருத்து தெரிவித்த ஜம்மு - காஷ்மீர் பார் கவுன்சில் தரப்பு வழக்குரைஞர், "இந்த விவகாரத்தில் மாற்று வழியைக் கண்டறிய மத்திய அரசு எந்தவிதமான முயற்சியையும் மேற்கொள்ளவில்லை' என்றார். இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் கூறியதாவது:
    பெல்லட் குண்டு விவகாரத்தில் எத்தகைய மாற்று வழியைக் கையாளலாம்? எவ்வாறு தற்போது உள்ள முறையைக் கைவிடலாம்? என்பன குறித்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் வழங்குமாறு ஜம்மு - காஷ்மீர் பார் கவுன்சிலுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இரு வாரங்களுக்குள் அது தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து மனு மீதான விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai