சுடச்சுட

  

  ம.பி.யில் மதுபானக் கடைகள் அனைத்தும் படிப்படியாக மூடப்படும்: சிவராஜ் சிங் சௌஹான்

  By DIN  |   Published on : 11th April 2017 01:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sivarajsingh

  மத்தியப் பிரதேசத்தில் மதுபானக் கடைகள் அனைத்தும் படிப்படியாக மூடப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக நர்சிங்பூர் மாவட்டம், நீம்கரா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:
  மத்தியப் பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் படிப்படியாக மூடப்படும். முதல்கட்டமாக, நர்மதா நதியைச் சுற்றி 5 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் மதுபானக் கடைகளை மாநில பாஜக அரசு மூடியுள்ளது.
  அடுத்தகட்டமாக, பொது மக்கள் வசிக்கும் இடங்களிலும், கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள இடங்கள் அருகிலும் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படாது. போதை விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் மாநில அரசு விரைவில் தொடங்கவுள்ளது என்று சிவராஜ் சிங் சௌஹான் கூறினார்.
  மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு இடங்களிலும் கடந்த ஒரு மாத காலமாக மதுபானக் கடைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. ரெய்சன் மாவட்டம், பெய்ரேலியில் நெடுஞ்சாலையில் இருந்த மதுபானக் கடையை பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அதிகாரிகள் மாற்ற முயன்றபோது, அதைக் கண்டித்து கடந்த 5-ஆம் தேதியன்று போராட்டம் நடைபெற்றது. அப்போது போராட்டக்காரர்களால் 2 வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. 4 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
  முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு பாஜக எம்எல்ஏ சுதர்சன் குப்தா கோரிக்கை விடுத்தார். மேலும், மதுபானக் கடையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற போராட்டத்துக்கும் அவர் ஆதரவு தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai