சுடச்சுட

  

  மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 11th April 2017 04:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  electronic voting

  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதால், அவற்றுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறைப்படி எதிர்காலத் தேர்தல்களை நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை வலியுறுத்தின.
  உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜவாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து தேர்தல் ஆணையம் இரண்டு முறை விளக்கம் அளித்தது. தவிர, இது தொடர்பாக "அடிக்கடி எழுப்பப்படும் கேள்விகள்' என்ற பெயரில் கேள்வி-பதில் பாணியிலான அறிக்கையை தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
  இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக நாடாளுமன்றத்தில் உள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான குலாம் நபி ஆஸாதின் அறையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் திங்கள்கிழமை கூடினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா, கபில் சிபல், விவேக் தங்கா, ஐக்கிய ஜனதா தளத்தின் அலி அன்வர் அன்சாரி, திரிணமூல் காங்கிரஸின் சுகேந்து சேகர் ராய், பகுஜன் சமாஜைச் சேர்ந்த சதீஷ் மிஸ்ரா, சமாஜவாதி கட்சிப் பிரமுகர் நீரஜ் சேகர், தேசியவாத காங்கிரஸின் மஜீத் மேமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.பி.நாராயணன், ஆர்ஜேடி கட்சியைச் சேர்ந்த ஜே.பி.நாராயண் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  அப்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பான தங்களது கருத்துகளை ஒருங்கிணைந்த முறையில் தேர்தல் ஆணையத்திடம் கொண்டு செல்வது என்று இந்தத் தலைவர்கள் முடிவு செய்தனர்.
  மேலும், நிகழாண்டில் நடைபெற உள்ள குஜராத் மற்றும் ஹிமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்களில் 50 சதவீத தொகுதிகளில் "யாருக்கு வாக்களித்தோம்' என்பதை வாக்காளர்கள் உறுதிசெய்து கொள்ள வழிவகுக்கும் ஒப்புகைச்சீட்டு நடைமுறையை பயன்படுத்துமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
  தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் சந்திப்பு: இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு காங்கிரஸ், பகுஜன் சமாஜ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 16 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஒன்றுசேர்ந்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தனர். அப்போது, "மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டதால், அவற்றுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச்சீட்டு முறைப்படி எதிர்காலத் தேர்தல்களை நடத்த வேண்டும்' என்று அவர்கள் கூட்டாகக் கோரிக்கை வைத்தனர்.
  அனைத்துக் கட்சிக் கூட்டம்: இந்தச் சந்திப்புக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலும், திமுக எம்.பி. சிவாவும் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தாம் கூட்ட இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது' என்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai