சுடச்சுட

  

  ரூ.54,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் இந்தியா-வங்கதேசம் இடையே கையெழுத்து

  By DIN  |   Published on : 11th April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  agreement

  தில்லியில் இந்திய - வங்கதேச தொழில் நிறுவனங்கள் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிகழ்ச்சியில் பங்கேற்ற வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தொழில் துறை தலைவர்கள்.

  இந்திய - வங்கதேச தொழில் நிறுவனங்கள் இடையே ரூ.54,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின.
  மின் உற்பத்தி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  தில்லியில் இந்திய தொழிலகக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில், பல்வேறு இந்திய தொழில் துறை தலைவர்களின் பங்கேற்புடன் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  அந்த நிகழ்ச்சியில், வங்கதேசத்தில் உள்ள ராம்பால் நகரில் ரூ.9,600 கோடி செலவில் 1,320 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட மின் உற்பத்தி நிலையத்தைக் கட்டுவதற்காக, வங்கதேச-இந்திய நட்புறவு மின்உற்பத்தி நிறுவனத்துக்கும், எக்ஸிம் வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  வங்கதேசத்தில் உள்ள மேக்னாகாட்டில் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது, மின்சாரம் கொள்முதல் செய்வது ஆகியவை தொடர்பாக, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கும், மத்திய எரிசக்தித் துறை அமைச்சகத்துக்கும் இடையே ரூ.18,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதேபோல், ரூ.18,900 கோடி முதலீட்டில் மின் உற்பத்தி தொடங்குவது தொடர்பாக, இந்திய அரசின் தேசிய அனல்மின் கழகத்துக்கும், வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
  மேலும், அதானி மின் உற்பத்தி நிறுவனத்துக்கும், வங்கதேச மின்தொகுப்பு நிறுவனத்துக்கும் இடையே ரூ.12,000 கோடி முதலீட்டில் மின் உற்பத்தி, மின்சாரம் கொள்முதல் ஆகியவை தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  இதுதவிர, இந்திய, வங்கதேச எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த ஹசீனா விருப்பம்: அதைத் தொடர்ந்து பேசிய வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவுடனான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்த தாம் விரும்புவதாகக் கூறினார். அவர் மேலும் பேசியதாவது: மோதல் போக்கினால் எதுவும் தீர்க்கப்படவில்லை. அனைத்துப் பிரச்னைகளுக்கும் நட்புறவு மட்டுமே தீர்வாகும். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் எதிர்ப்பால், தீஸ்தா நதிநீர் ஒப்பந்தத்தை இவ்விரு நாடுகளால் இறுதிசெய்ய இயலவில்லை. வங்கதேச தொழில் வளர்ச்சியில் இந்திய தொழில் துறை நிறுவனங்கள் மேலும் பங்கேற்க வேண்டும் என்றார் ஷேக் ஹசீனா.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai