சுடச்சுட

  

  "வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவ இந்தியா உறுதிபூண்டுள்ளது'

  By DIN  |   Published on : 11th April 2017 02:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pranab

  வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு உற்ற நண்பராக உறுதுணை புரிவதற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
  இந்தியா வந்துள்ள வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை தில்லியில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
  ஹசீனாவுடனான சந்திப்பின்போது, எரிசக்தி, வர்த்தகம், கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதாகவும், வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சியில் உற்ற நண்பராக உறுதுணை புரிவதற்கு இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் வலுவாக வளர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
  புவியியல் ரீதியில் இரு நாடுகளும் நெருக்கமாக அமைந்திருப்பது சாதகமான அம்சம் என்றும் இதை இருதரப்பு நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.
  வங்கதேசத்தில் அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட உள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு சலுகையுடன் கூடிய நிதியுதவி அளிப்பதாக இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பு வங்கதேசத்தில் மேலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
  இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஹசீனாவின் பங்களிப்பையும், ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பன்முகத்தன்மை, மனித கண்ணியம் ஆகியவற்றை வலுப்படுத்த வங்கதேசம் உறுதிபூண்டிருப்பதையும் குடியரசுத் தலைவர் பாராட்டினார் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai