சுடச்சுட

  

  பனாஜி: கோவா மாநில அமைச்சரவை இன்று புதன்கிழமை (ஏப். 12) விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
  இதுதொடர்பாக, முதல்வர் அலுவலகத்தின் மூத்த அதிகாரியொருவர் கூறுகையில், கோவாவில் முதல்வர் மனோகர் பாரிக்கர் தலைமையிலான அமைச்சரவை இன்று புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், 2 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளனர். அவர்களில் ஒருவர் விஸ்வஜித் ராணே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இன்னொருவர் யார் என்பது பின்னர் தெரியவரும்.
  புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று புதன்கிழமை மதியம் நடைபெறும் என்றார் அவர்.
  அண்மையில் நடந்து முடிந்த கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் வால்பய் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றவர்தான் விஸ்வஜித் ராணே.
  40 உறுப்பினர் அடங்கிய கோவா சட்டப் பேரவையில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும், அங்கு பிற கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. மனோகர் பாரிக்கர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து, சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசுக்கு ஆதரவாக 22 பேரும், எதிராக 16 பேரும் வாக்களித்தனர்.
  காங்கிரஸ் உறுப்பினர் விஸ்வஜித் ராணே வாக்கெடுப்பை புறக்கணித்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்த ராணே தனது எம்எல்ஏ பதவியையும் ராஜிநாமா செய்தார். இந்நிலையில், அவர் முதல்வர் பாரிக்கர் முன்னிலையில் பாஜகவில் கடந்த வாரம் இணைந்தார்.
  தற்போது, கோவா அமைச்சரவையில் முதல்வர் பாரிக்கர் உள்பட 10 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai