சுடச்சுட

  

  பாகிஸ்தான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: இந்தியா கடும் எச்சரிக்கை

  By DIN  |   Published on : 12th April 2017 04:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  relief

  இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
  குல்பூஷண் ஜாதவ் (46) பாகிஸ்தானில் உளவு பார்க்கும் செயல்களில் ஈடுபட்டதாகவும், சதிச் செயல்களுக்கு திட்டமிட்டதாகவும் கூறி அந்த நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு திங்கள்கிழமை மரண தண்டனை விதித்தது.
  இதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கட்சி பேதமில்லாமல் அனைத்து உறுப்பினர்களும் செவ்வாய்க்கிழமை தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
  இந்தப் பிரச்னை தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:
  குல்பூஷண் ஜாதவ் தவறிழைத்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு இந்த தண்டனையை அளித்துள்ளது.
  தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தத் தண்டனை நிறைவேற்றப்படும்பட்சத்தில், இதை முன்கூட்டியே திட்டமிட்ட கொலையாகத் தான் கருத வேண்டியுள்ளது.
  சட்டத்தின் அடிப்படை விதிகள், நீதி, சர்வதேச உறவுகள் ஆகியவற்றை மீறும் வகையில் அப்பாவி இந்தியர் ஒருவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதை மத்திய அரசும், நாட்டு மக்களும் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
  இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டால், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இரு தரப்பு உறவுகளில் விரிசல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்.
  குல்பூஷண் ஜாதவ் அவருடைய பெற்றோருக்கு மட்டும் மகன் அல்ல; இந்தியாவுக்கே மகன் போன்றவர்.
  உண்மையில் ஜாதவ், ஈரானில் வியாபாரம் செய்து வந்தார். அங்கே அவர் கடத்தப்பட்டு, பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
  அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் குறித்து சரியாகத் தெரியவில்லை. தூதரக ரீதியாக அவரைத் தொடர்புகொண்டால் மட்டுமே அனைத்து உண்மைகளும் தெரியவரும்.
  எனினும், எதிர்பாராத சூழ்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. குல்பூஷண் ஜாதவை காப்பாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொள்ளும். இதுதொடர்பாக, சிறந்த வழக்குரைஞர்கள் மூலமாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்படும்.
  மேலும், அந்த நாட்டின் அதிபரிடமும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்படும் என்று அந்த அறிக்கையில் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
  ராஜ்நாத் சிங் கண்டனம்: இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் கூறியதாவது:
  குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளதை மத்திய அரசு கடுமையாக கண்டிக்கிறது. இந்த விவகாரத்தில் சட்டம் மற்றும் நீதியின் அனைத்து விதிமுறைகளும் மீறப்பட்டுள்ளன. ஜாதவுக்கு நியாயம் கிடைப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்.
  குல்பூஷண் ஜாதவ் முறைப்படியான இந்திய கடவுச்சீட்டை வைத்திருந்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. உளவு பார்க்கச் செல்பவர் முறையான கடவுச்சீட்டை வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன? பாகிஸ்தானின் கூற்று அதிர்ச்சியும், ஆச்சரியமும் அளிக்கிறது.
  இந்திய தூதரக ரீதியாக ஜாதவைச் சந்திப்பதற்கான முயற்சிகளுக்கு 13 முறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.
  காங்கிரஸ் கண்டனம்: இதுகுறித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத் கண்டனம் தெரிவித்துப் பேசுகையில், "குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் உண்மை வெளிவரும்பொருட்டு மிகச் சிறந்த வழக்குரைஞர்களுக்கு இந்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்' என்றார்.
  இதேபோல், காங்கிரûஸ சேர்ந்த சசி தரூர், சிவசேனையைச் சேர்ந்த விநாயக் ரௌத், திரிணமுல் காங்கிரஸின் சௌகதா ராய் உள்ளிட்டோரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர்.


  எதையும் சந்திக்கத் தயார்

  பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயார் என்று அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
  குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் நவாஸ் ஷெரீஃப் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.
  பாகிஸ்தான் விமானப் படை சார்பில் கைபர் - பாக்டூன்குவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் நவாஸ் ஷெரீஃப் பங்கேற்றுப் பேசியதாவது:
  பாகிஸ்தான், அமைதியை விரும்பும் நாடு. பிற நாடுகளுடன், குறிப்பாக அதன் அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதே பாகிஸ்தானின் கொள்கையாகும்.
  அதேசமயம், பாகிஸ்தானுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்த அச்சுறுத்தலையும் சந்திக்கத் தயாராகவே உள்ளோம். நாட்டின் பாதுகாப்புப் படையின் மீது பாகிஸ்தானுக்கு முழு நம்பிக்கை உள்ளது. தற்கால சவால்களை சந்திக்கும் வகையில் பாதுகாப்புப் படையினருக்குத் தேவைப்படும் ஆதரவை அரசு அளிக்கும் என்றார் நவாஸ் ஷெரீஃப்.


  மேல்முறையீடு செய்யலாம்: பாக். அமைச்சர்

  குல்பூஷண் ஜாதவ், தமக்கு எதிராக விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து 60 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என்று பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
  இதுதொடர்பாக, பாகிஸ்தான் நாடாளுமன்ற மேலவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தின்போது அவர் கூறியதாவது:
  குல்பூஷண் ஜாதவ் மீதான விசாரணை 3 மாதங்கள் நடைபெற்றது. விசாரணையின்போது, அவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதற்கான ஆதாரம் உள்ளது.
  எனினும், இதை எதிர்த்து அவர் வரும் 60 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம்.
  குல்பூஷண் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை திட்டமிட்ட கொலைக்கு ஒப்பானது என்று இந்தியா கருத்து தெரிவித்துள்ளது. உண்மையில், காஷ்மீரில் நடைபெற்று வருபவை தான் திட்டமிட்ட கொலைகளாகும் என்றார் க்வாஜா ஆசிஃப்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai