சுடச்சுட

  

  மாநிலங்களவையில் ப.சிதம்பரத்துக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி புகார்

  By DIN  |   Published on : 12th April 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிபிஐ விசாரணை வளையத்தில் உள்ளதால் மத்திய உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுத் தலைவராக ப.சிதம்பரம் நீடிக்கக் கூடாது என்று மாநிலங்களவையில் பாஜகவைச் சேர்ந்த நியமன உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தினார்.

  இது தொடர்பாக மாநிலங்களவையில் சுப்பிரமணியன் சுவாமி செவ்வாய்க்கிழமை பிரச்னை எழுப்பினார். அப்போது அவர், "மாநிலங்களவை பூஜ்ய நேர அலுவலின் போது, அரசுத் துறைகளுக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக்களின் அறிக்கைகளை தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு சம்பந்தப்பட்ட குழுக்களின் அறிக்கையை தாக்கல் செய்ய அழைக்கிறீர்கள். அக்குழுக்களில் ஒரு குழுவின் தலைவராக இருப்பவர் சிபிஐ மூலம் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டவர். அவர் எப்படி உள்துறைக்கான நிலைக் குழுவின் தலைவராக நீடிக்கலாம் என்பதே எனது கேள்வி. இதுபோன்ற நபர்கள் நிலைக் குழுச் தலைவராக இருக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட நபரை நிலைக் குழுத் தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ள வேண்டும்' என்றார்.
  இதைக் கேட்ட அவையை வழிநடத்திக் கொண்டிருந்த மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், "உங்கள் கோரிக்கை பற்றி மாநிலங்களவைத் தலைவருக்கு முறைப்படி கடிதம் எழுதுங்கள்' என்றார்.
  அப்போது சுப்பிரமணியன் சுவாமி சிதம்பரத்தின் பெயரைக் குறிப்பிட்டு "அவர்தான் உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுவின் தலைவராக இருக்கிறார்' என்றார். இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். "இதுபோன்ற கோரிக்கையை முன்வைக்க சுப்பிரமணியன் சுவாமியை அனுமதிக்கக் கூடாது' என்று காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் குரல் எழுப்பினார். இதையடுத்து, பி.ஜே.குரியன், "இதுபோன்ற விவகாரத்தை மாநிலங்களவைத் தலைவருக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்' என்று மீண்டும் அறிவுறுத்தினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai