சுடச்சுட

  

  விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பிரதமர் தலையிட வேண்டும்

  By DIN  |   Published on : 12th April 2017 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தில்லியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மேற்கொண்டுள்ள தொடர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர பிரதமரோ, மூத்த மத்திய அமைச்சரோ இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் மாநிலங்களவையில் வலியுறுத்தினர்.
  மாநிலங்களவை அதன் துணைத் தலைவர் பி.ஜே.குரியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசியதாவது: வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்குத் தெரிந்த பல்வேறு உத்திகளில் அவர்கள் போராட்டங்களை நடத்தி மத்திய அரசின் கவனிப்பில்லாததால் விரக்தியின் உச்சத்துக்குச் சென்றுள்ளனர். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்டுள்ள விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமானால், அதில் மத்திய அரசு தலையிட வேண்டும். ஆகவேதான் பிரதமர் உறுதியளிக்க வேண்டும் என விவசாயிகள் கோருகின்றனர்.
  குறைந்தபட்சம் பிரதமரோ மூத்த மத்திய அமைச்சரோ விவசாயிகளைச் சந்தித்து சமாதானப்படுத்த முயற்சி செய்ய வேண்டும். இவர்களின் போராட்டத்துக்கு உலக அளவில் தீவிரமாக ஆதரவு பெருகி வருகிறது. பிற நாடுகள் நம்மைப் பார்த்து கேலிக்கூத்தாக சிரிக்கின்றன. எனவே, தாழ்மையான அனுதாபத்துடன் விவசாயிகளின் நிலையைப் பார்த்து அவர்களது துயரைத் துடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் திருச்சி சிவா.
  எம்.பி.க்கள் ஆதரவு: இதையடுத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த உறுப்பினர் சீதாராம் யெச்சூரி, "தில்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குச் சென்று நானும் விவசாயிகளைப் பார்த்தேன். உணவு இல்லாததால் எலிக்கறியை உண்ணும் அவலத்தில் அவர்கள் உள்ளனர். நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் விவசாயிகளுக்கே இந்த நிலை என்றால் மற்றவர்களின் எதிர்காலம் என்னாவாவது? இதில் உடனே மத்திய அரசு தலையிட வேண்டும்' என்றார்.
  அப்போது அதிமுக குழுத் தலைவர் நவநீதிகிருஷ்ணன் எழுந்து, "இது மிகவும் தீவிரமான பிரச்னை என்பதால் காலம் தாழ்த்தாமல் மத்திய அரசு தலையிட வேண்டும்' என வலியுறுத்தினார். விஜயகுமார், அர்ஜுனன், செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இவர்களுக்கு ஆதரவாக பேசிய இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, "தில்லி மட்டுமின்றி தமிழகத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் வலுத்துள்ளது. ஆனால், அவர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் மத்திய அரசு எந்தவித உணர்வும் காட்டாமல் அலட்சியமாக உள்ளது' என்றார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜனும் ஆதரவு தெரிவித்து குரல் எழுப்பினார்.
  பி.ஜே.குரியன் கேள்வி: இதைக் கேட்ட மாநிலங்களவைத் துணைத் தலைவர் பி.ஜே.குரியன், "இந்த விவகாரத்தை நானும் தினந்தோறும் நாளிதழ்களில் படித்து வருகிறேன். உயிரிழந்த விவசாயிகளின் மண்டை ஓடுகளுடன் எலிக்கறி உண்ணும் அவலத்தில் நமது விவசாயிகள் இருப்பது கவலை தரும் விஷயம். இவ்வளவு தூரம் விவசாயிகள் தீவிரமாகப் போராடி வரும் வேளையில், அவர்களை சமாதானப்படுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட மத்திய அரசு தரப்பில் ஒரு பிரதிநிதியை ஏன் இன்னும் அனுப்பவில்லை?' என்று கேள்வி எழுப்பினார்.
  அமைச்சர் பதில்: இதற்கு நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, "இது மிகவும் நுட்பமான மற்றும் மிக முக்கியமான பிரச்னை. மாநிலங்களவையில் உறுப்பினர்கள் தெரிவித்த கவலைகளை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai