சுடச்சுட

  

  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலச் சட்டத் திருத்த மசோதாவுக்கு முட்டுக்கட்டை ஏன்? எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் கேள்வி

  By DIN  |   Published on : 13th April 2017 12:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi1

  ரதமர் மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்த இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள்.

  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) நலச் சட்டத் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முட்டுக்கட்டை போடுவதற்கு காரணம் என்ன? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
  பாஜக எம்.பி.க்களுடனான கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓபிசி நலச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.
  அதன்படி, தற்போது உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தைக் கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர்களுக்கான நல ஆணையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கு வகைசெய்யும் அம்சங்களுடன் அந்தச் சட்டத் திருத்தம் தயாரானது.
  மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் மாநிலங்கள் புதிதாக எந்த ஜாதியையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ இயலாத வகையில் சில அம்சங்கள் அதில் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக, நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள முடியாது என்பதே அந்தச் சட்டத் திருத்தத்தில் பிரதான அம்சமாக இருந்தது.
  அந்தச் சட்டத் திருத்தமானது மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அந்தச் சட்டத் திருத்தம் செவ்வாய்க்கிழமை (ஏப்.11) அனுப்பப்பட்டது.
  இந்நிலையில், மக்களவையில் ஓபிசி நலச் சட்டத் திருத்தத்ததை நிறைவேற்றியதற்காக இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.க்கள் பிரதமர் மோடியை புதன்கிழமை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது அவர்களிடம் பேசிய மோடி, இந்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போட்டதற்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்றத் தேர்வுக் குழுத் தலைவரும், பாஜக பொதுச் செயலாளருமான பூபேந்திர யாதவ், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  ஓபிசி நலச் சட்டத் திருத்தம், அந்த சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கக்கூடியது என்று கூட்டத்தில் பிரதமர் குறிப்பிட்டார். இதனை நிறைவேற்ற விடாமல் எதிர்க்கட்சியினர் எதற்கு தடுத்து நிறுத்த வேண்டும்? என்றும் அவர் ஆதங்கப்பட்டார்.
  இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் ஓபிசி பிரிவினருக்கு சமூகத்தில் கூடுதல் அதிகாரமளிக்க முடியும் என்று தெரிவித்த பிரதமர் மோடி, இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும் என பாஜக எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார்.
  மாநிலங்களவையிலும் இந்த சட்டத் திருத்தம் நிறைவேறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் எனவும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார் என்றார் பூபேந்தர் யாதவ்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai