சுடச்சுட

  

  ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு ரூ. 50,000 வளர்ச்சி நிதி: உ.பி. அரசு புதிய திட்டம்

  By DIN  |   Published on : 13th April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஏழைக் குடும்பத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு கல்வி மற்றும் திருமணத்துக்கு உதவும் வகையில், ரூ. 50,000 வளர்ச்சி நிதிப் பத்திரம் வழங்குவதற்கான 'பாக்ய லக்ஷ்மி' திட்டம் என்ற புதிய திட்டத்தை உத்தரப் பிரதேச அரசு அமல்படுத்தவுள்ளது.
  இதுகுறித்து உத்தரப் பிரதேச அரசு செய்தித் தொடர்பாளர், லக்னெளவில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
  லக்னெளவில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற அரசு அதிகாரிகளுடனான கூட்டத்தில், பாஜக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தபடி, ஏழைக் குடும்ப பெண் குழந்தைகளுக்கு உதவும் வகையிலான திட்டத்தை அமல்படுத்துவது குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனை நடத்தினார். இதற்கான விரிவான செயல் திட்டத்தை விரைந்து வகுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
  'பாக்ய லக்ஷ்மி' என்ற பெயரில் செயல்படுத்தப்படவுள்ள இத் திட்டத்தின்கீழ் ஏழைக் குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகளின் பெயரில் தலா ரூ. 50,000 வளர்ச்சி நிதிப் பத்திரம் வழங்கப்படும்.
  இத் திட்டத்தின்படி, அந்நிதியை முதலீடாகக் கொண்டு கிடைக்கும் வட்டித்தொகை மூலம், அந்தப் பெண் குழந்தை 6-ஆம் வகுப்புக்குச் செல்லும்போது ரூ. 3,000, 8-ஆம் வகுப்பை எட்டும்போது ரூ. 5,000, பத்தாம் வகுப்பின்போது ரூ. 7,000, 12-ஆம் வகுப்பின்போது ரூ. 8,000 வழங்கப்படும். மேலும் அந்தப் பெண் குழந்தை 21-ஆவது பூர்த்தி செய்யும்போது அவரது திருமணம் அல்லது பிற தேவைகளுக்கு உதவும் வகையில் ரூ. 2 லட்சம் நிதி வழங்கப்படும்.
  மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, விதவைப் பெண்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் ரூ. 500 வழங்கவும், விதவைப் பெண்கள் மறுதிருமணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் நிதியுதவியை தற்போதுள்ள ரூ. 11,000-லிருந்து ரூ. 51,000 ஆக உயர்த்தவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். அத்துடன், வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் சட்ட உதவிக்கான தொகையை ரூ. 2,500-லிருந்து ரூ. 10,000 ஆக உயர்த்தவும், அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூ. 125-லிருந்து ரூ. 500 ஆக உயர்த்தவும் முதல்வர் உத்தரவிட்டார் என அரசு செய்தித் தொடர்பாளர் கூறினார்.
  பாதி விலையில் மின்சாதனங்கள்: இதனிடையே, சுற்றுச்சூழலுக்கு உகந்த, மின்சார சேமிப்புக்கு உதவுகின்ற மின்சாதனங்களை, சந்தை விலையைவிட பாதி விலைக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் உஜாலா திட்டம், அம்பேத்கர் பிறந்த தினமான வரும் 14-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தில் தொடங்கப்படவுள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், மத்திய மின்துறை அமைச்சர் பியூஷ் கோயலும் இணைந்து இத்திட்டத்தைத் தொடக்கிவைக்கவுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai