சுடச்சுட

  

  கலாபவன் மணி மரணம்: சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 13th April 2017 12:34 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Kalabhavan

   

  திரைப்பட நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணமடைந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் இதுதொடர்பான விசாரணை நடவடிக்கைகளைத் தொடங்குமாறும் சிபிஐ அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  தென்னிந்தியாவில் பிரபலமான நடிகராக விளங்கிய கலாபவன் மணி, கடந்த ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி திடீரென உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கலாபவன் மணியின் சகோதரரும், மனைவியும் புகாரளித்தனர்.

  இதுதொடர்பாக நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அவரது உடலில் நச்சு கலந்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுமாறு கலாபவன் மணியின் உறவினர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

  அந்த மனு மீதான விசாரணையின்போது, சிபிஐ தரப்பில் சில காரணங்கள் முன்வைக்கப்பட்டன. வேலைப் பளுவும், நிலுவையில் பல வழக்குகளும் தங்களுக்கு இருப்பதால் இந்த விவகாரத்தைக் கூடுதலாக விசாரிக்க இயலாது என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

  இந்நிலையில், அந்த மனு, நீதிபதி சுனில் தாமஸ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது:

  நிறைய வேலைப் பளு இருப்பதால் கலாபவன் மணி வழக்கை விசாரிக்க முடியாது என்று சிபிஐ தரப்பில் முன்வைக்கப்படும் காரணத்தை ஏற்றுக் கொள்ள இயலாது. இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐ அமைப்புக்கு உத்தரவிடப்படுகிறது.

  மாநில போலீஸார் விசாரித்து வரும் இந்த வழக்கை ஒரு மாதத்துக்குள் தங்கள் வசம் சிபிஐ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai