சுடச்சுட

    

    கோடை விடுமுறையில் பணியாற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அழைப்பு: மக்களவையில் தகவல்

    By DIN  |   Published on : 13th April 2017 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    parliment

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் கோடை விடுமுறையில் சில நாள்களில் மட்டும் தங்கள் விருப்பத்தின் பேரில் பணியாற்றலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் அழைப்பு விடுத்துள்ளார் என்று மக்களவையில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
    கோடை விடுமுறையில் சுமார் 5,300 வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நீதிபதிகள் காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாததால் நாடு முழுவதும் 3 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நீதிமன்றங்களில் தேங்கியுள்ளன. உயர் நீதிமன்றங்களில் மட்டும் 38.7 லட்சம் வழக்குகள் உள்ளன. இதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
    மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் சட்டத் துறை இணையமைச்சர் பி.பி.செளத்ரி இது தொடர்பாகக் கூறியதாவது:
    உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக 5 நீதிபதிகள் அடங்கிய 3 அரசியல்சாசன அமர்வு கோடை விடுமுறை காலத்தில் செயல்படவுள்ளது. கோடை விடுமுறையில் சில நாள்கள் மட்டும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் பணியாற்ற முன்வரலாம் என்று நாட்டில் உள்ள 24 உயர் நீதிமன்றங்களுக்கும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளார் என்றார்.
    வரும் மே 11-ஆம் தேதி நீதிமன்றத்தின் கோடை விடுமுறையின் முதல் நாளாகும். அன்றைய தினத்தில் தலாக் விவாகரத்து முறை, முஸ்லிம்கள் மத்தியில் உள்ள பலதார மணம் ஆகியவை குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க இருக்கிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai