சுடச்சுட

  

  தலாய் லாமாவால் எல்லைப் பிரச்னை மேலும் சிக்கலாகும்: சீனா எச்சரிக்கை

  By DIN  |   Published on : 13th April 2017 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தலாய் லாமாவின் அருணாசலப் பிரதேசப் பயணத்தால் இந்தியா-சீனா இடையிலான எல்லைப் பிரச்னை மேலும் சிக்கலாகும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
  திபெத் பௌத்த மதத் துறவி தலாய் லாமா அருணாசலப் பிரதேசத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். திபெத்தை ஆக்கிரமித்து தனது நாட்டின் ஒரு பகுதியாக்கிக் கொண்ட சீனாவுக்கு இது பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சீனா ஏற்கெனவே இந்தியா மீதான தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது.
  இந்நிலையில், பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லு காங் கூறியதாவது:
  தனது இறையாண்மையைப் பாதுகாக்கவும், எல்லையைக் காக்கும் நோக்கிலும் சீனா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும். தலாய் லாமா, அருணாசலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ஆகியோர், திபெத்துடன்தான் அருணாசலப் பிரதேசம் எல்லையைக் கொண்டுள்ளது என்று கூறி பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளனர்.
  இந்தியா-சீனா இடையிலான பிரச்னைக்குரிய இடத்துக்கு செல்ல தலாய் லாமா அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், திபெத் குறித்து ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை இந்தியா மீறிவிட்டது. இதனால், இருநாடுகளிடையிலான எல்லைப் பிரச்னை மேலும் சிக்கலாகும் என்றார் அவர்.
  இந்தியா-சீனா இடையே 3,488 கி.மீ. தொலைவிலான எல்லைப் பிரச்னையைத் தீர்ப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது வரை பிரச்னைக்குத் தீர்வுகாணப்படவில்லை.
  அருணாசலப் பிரதேசத்தின் ஒரு பகுதியை தெற்கு திபெத் என்று கூறி சீனா உரிமை கொண்டாடி வருகிறது. ஆனால், 1962-ஆம் ஆண்டு போரில் சீனா ஆக்கிரமித்த அக்சாய் சின் பகுதிக்கு இந்தியா உரிமைகோரி வருகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai