சுடச்சுட

  

  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு: 18 மசோதாக்கள் நிறைவேற்றம்

  By DIN  |   Published on : 13th April 2017 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  parliment

  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு புதன்கிழமை (ஏப்.12) நிறைவடைந்தது. இந்தத் தொடரில் இரு அவைகளிலும் 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும், மொத்தமாக 312 மணி நேரத்துக்கு ஆக்கப்பூர்வமான அலுவல்கள் நடைபெற்றிருப்பதாகவும் நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது.
  அவற்றில் சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தை அமலாக்க வகை செய்யும் 4 துணைச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது.
  பட்ஜெட் கூட்டத் தொடரின் செயல்பாடுகள் திருப்திகரமாகவும், வெற்றிகரமாகவும் அமைந்திருந்ததாக பிரதமர் மோடி ஏற்கெனவே மகிழ்ச்சி வெளிப்படுத்தியிருந்த நிலையில், அதனை தற்போது நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களும் உறுதி செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  பொதுவாகவே, பிப்ரவரி மாதத்தின் இறுதியில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதுதான் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த நடைமுறையை மாற்றி முன்கூட்டியே (பிப்.1) இம்முறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்தது மத்திய பாஜக அரசு. அதற்கு தகுந்தாற்போல, ஜனவரி 31-ஆம் தேதியே பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உரையுடன் தொடங்கியது.
  பட்ஜெட்டை முன்கூட்டியே தாக்கல் செய்தால்தான், அதில் வெளியிடப்படும் அறிவிப்புகளை நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்தே செயல்படுத்த முடியும் என்று மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.
  மேலும், இம்முறை ரயில்வே பட்ஜெட் தனியாகத் தாக்கல் செய்யப்படாமல் பொது பட்ஜெட்டுடன் இணைத்து தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளில் மத்திய அரசு சீர்திருத்தங்களைக் கொண்டுவந்த நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
  அதற்கு ஏற்றாற்போல முதல் அமர்வில் சில பிரச்னைகளை முன்னிறுத்தி எதிர்க்கட்சிகள் அவையை முடக்கின. பல மசோதாக்களை நிறைவேற்ற இயலாத நிலை உருவானது. இதற்கிடையே, ஜிஎஸ்டி வரிவிதிப்பை ஜூலை முதல் அமலாக்க அதன் 4 துணைச் சட்டங்களை நிறைவேற்றியே ஆக வேண்டிய நிர்பந்தம் மத்திய அரசுக்கு உருவானது.
  இந்தச் சூழலில், கடந்த மார்ச் 9-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியது. கோவா, மணிப்பூர் உள்ளிட்ட மாநிலப் பேரவைத் தேர்தல்களில் அதிக இடங்களைக் கைப்பற்றாத போதிலும், பிற கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சியமைத்த விவகாரம் இரு அவைகளிலும் பெரும் புயலைக் கிளப்பியது.
  இதனால், சில நாள்களுக்கு அவை நடவடிக்கைகள் முடங்கின. இதைத் தவிர, ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாப்புக் குழுவினரால் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம், மத்தியப் பிரதேசத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர சோதனையின்போது பாஜகவுக்கு மட்டுமே வாக்குகள் பதிவானதாக எழுந்த குற்றச்சாட்டு உள்ளிட்டவைகளும் நாடாளுமன்றத்தில் அமளிக்கு வித்திட்டன.
  இருந்தபோதிலும், ஜிஎஸ்டி துணைச் சட்டங்களான, மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி), மாநில இழப்பீட்டு ஜிஎஸ்டி, யூனியன் பிரதேசங்களுக்கான ஜிஎஸ்டி ஆகியவை எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்போடு இரு அவைகளிலும் நிறைவேறின. அவற்றைத் தவிர மகப்பேறுப் பலன் சட்டத் திருத்தம், மோட்டார் வாகனச் சட்டத் திருத்தம், இதர பிற்படுத்தப்பட்டோர் நலச் சட்டத் திருத்தம் உள்பட 23 மசோதாக்கள் மக்களவையில் நிறைவேறின.
  மாநிலங்களவையைப் பொருத்தவரை 14 மசோதாக்கள் நிறைவேறின. இரு அவைகளிலும் சேர்த்து 18 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  மொத்தம் 29 நாள்கள் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், மக்களவை 176 மணி நேரம் 39 நிமிடங்களும், மாநிலங்களவை 136 மணி நேரமும் செயல்பட்டதாக நாடாளுமன்றம் தகவல் வெளியிட்டுள்ளது.
  இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசுடன் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மோதல் போக்கைக் கடைப்பிடித்தாலும், இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவுக்கு பாகிஸ்தான் அரசு மரண தண்டனை விதித்த விவகாரத்தில் அரசுடன் இணைந்து அனைவரும் ஒருமித்த குரலில் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai