சுடச்சுட

  

  பெண்ணை காவல் அதிகாரி அறைந்த சம்பவம்: தமிழக தலைமைச் செயலர், டிஜிபிக்கு என்எச்ஆர்சி நோட்டீஸ்

  By DIN  |   Published on : 13th April 2017 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  police

  திருப்பூரில் பொது இடத்தில் பெண்ணை காவல் துறை அதிகாரி அறைந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவல் துறை தலைமை இயக்குநர், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.
  திருப்பூர் சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் , போராட்டப் பகுதியில் இருந்த பெண்ணை கன்னத்தில் அறைவது போன்ற காட்சி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின. இச்சம்பவத்துக்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள், பெண் உரிமை அமைப்புகள் உள்ளிட்டவை கடும் கண்டனம் தெரிவித்தன.
  இந்நிலையில், நாளிதழ்களில் இது தொடர்பாக வந்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் புதன்கிழமை விசாரணைக்கு ஏற்றது. இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலர், காவல் துறை தலைமை இயக்குநர், கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் ஆகியோருக்கு ஆணையம் அனுப்பியுள்ள நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
  திருப்பூர் சாமளாபுரம் சம்பவத்தைப் பார்க்கும் போது, சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு காவல் துறை அத்துமீறி செயல்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சம்பவத்தில் எந்தவித உதவிக்கும் வழியின்றி நின்று கொண்டிருந்த பெண்ணை காவல் துறை உயரதிகாரியே கன்னத்தில் அறைவது இதை உறுதிப்படுத்துகிறது. காவல் துறையின் இச்செயல் கடுமையான மனித உரிமை மீறல் மட்டுமின்றி, பெண்ணின் சுயமரியாதைக்கு பங்கம் விளைவிக்கும் செயலாகவும் கருதப்படுகிறது. இந்தச் செயலுக்காக மனித உரிமைகளை மீறியதாக உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பது குறித்து இரு வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai