சுடச்சுட

  

  மம்தாவின் தலைக்கு சன்மானம் அறிவிப்பு: பாஜக இளைஞரணித் தலைவருக்கு நாடாளுமன்றம் கண்டனம்

  By DIN  |   Published on : 13th April 2017 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலையைக் கொணர்வோருக்கு சன்மானம் அறிவித்த பாஜக இளைஞரணித் தலைவருக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  மேற்கு வங்க மாநிலம், பீர்பூம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஹனுமன் ஜெயந்தி விழா பேரணியில் கூட்டத்தைக் கலைப்பதற்கு போலீஸார் தடியடி நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் யோகேஷ் வர்ஷனே, மம்தா பானர்ஜியின் தலையைத் துண்டிப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானம் வழங்குவதாக புதன்கிழமை அறிவித்தார்.
  மக்களவையில்..: இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் புதன்கிழமை எதிரொலித்தது. மக்களவை கூடியதும், திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் செளகதா ராய், இந்த விவகாரத்தை எழுப்பிப் பேசினார். அவர் பேசியதாவது: தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மம்தா பானர்ஜியின் தலையைக் கொணர்வோருக்கு சன்மானம் என அறிவித்திருப்பது, மிகவும் அபாயகரமான போக்காகும். அதற்காக, இந்த அவை கண்டனம் தெரிவிக்க வேண்டும். பாஜக இளைஞரணித் தலைவருக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர். செளகதா ராயின் கருத்தை ஆதரித்துப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் இனி நிகழாமல் இருக்கும் விதமாக, மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
  அதற்குப் பதிலளித்துப் பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்த் குமார், ''இதை மத்திய அரசு வன்மையாகக் கண்டிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒருவருக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்'' என்றார். அதைத் தொடர்ந்து பேசிய மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், ''இதுபோன்ற கருத்துகளைத் தெரிவிப்பதை அனைத்து தரப்பினரும் தவிர்க்க வேண்டும்'' என்றார்.
  மாநிலங்களவையில்..: இதனிடையே, மாநிலங்களவையில் இந்த விவகாரத்தை திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினர் சுகந்து சேகர் ராய் எழுப்பினார். அவரது கருத்துக்கு ஆதரவாக, காங்கிரஸ், இடதுசாரி, சமாஜவாதி போன்ற எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர்.
  அதைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, 'மம்தாவை அச்சுறுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது கண்டிக்கத்தக்கது.
  இதில், சம்பந்தப்பட்டவர் மீது மாநில அரசு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்'' என்றார். அதையடுத்து, இந்த விவகாரம் மாநிலங்களவையில் முடிவுக்கு வந்தது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai