சுடச்சுட

  

  மாற்றுக் கருத்துகள் ஒடுக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் புகார்: குடியரசுத் தலைவரிடம் நேரில் மனு

  By DIN  |   Published on : 13th April 2017 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  congress

  குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துவிட்டு திரும்பும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி. ராஜா உள்ளிட்டோர்.

  நாட்டில் மாற்றுக் கருத்துகள் ஒடுக்கப்படுவதாகக் கூறி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு புதன்கிழமை மனு அளித்தது.
  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த உயர்நிலைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
  குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  நாட்டில் நிலவும் பல்வேறு முக்கியப் பிரச்னைகளைப் பட்டியலிட்டு குடியரசுத் தலைவரிடம் மனுவாக அளித்திருக்கிறோம்.
  நாட்டு மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் ஒருவித அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர். மாற்றுக் கருத்துகள் நசுக்கப்படுகின்றன. எனவே, நாட்டின் ஜனநாயகத்தையும், மக்களின் அடிப்படை உரிமைகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளோம்.
  நாட்டில் தற்போது சில பிற்போக்குவாதிகளின் அராஜகங்கள் அதிகரித்து வருகின்றன. அவர்கள் குடிமக்களை துன்புறுத்தி வருகின்றனர். ராஜஸ்தானில் மாடுகளைக் கடத்தியதாக ஒருவர் அண்மையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் இதற்கு ஓர் உதாரணம். இதுபோன்ற பல வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் அரங்கேறி வருகின்றன.
  நாடாளுமன்றத்தின் மாண்புகள் புறந்தள்ளப்படுகின்றன. பல முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையின் கவனத்துக்குக் கொண்டு வரப்படாமலேயே பண மசோதாக்களாக நிறைவேற்றப்படுகின்றன.
  ஆளுநர்களின் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி பாஜக அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்படுகின்றன.
  இதுபோன்ற அனைத்துப் பிரச்னைகளையும் குடியரசுத் தலைவரிடம் முன்வைத்துள்ளோம். மேலும், நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க அவரது தலையீடு அவசியம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளோம் என்றார் குலாம் நபி ஆஸாத்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai