சுடச்சுட

  

  வாக்களித்ததை உறுதி செய்யும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையருக்கு கேஜரிவால் கடிதம்

  By DIN  |   Published on : 13th April 2017 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ak

  தில்லி மாநகராட்சித் தேர்தலில், வாக்களித்ததை உறுதி செய்யும் வசதி கொண்ட (விவிபிஏடி) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாநில தேர்தல் ஆணையத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கடிதம் எழுதியுள்ளார்.

  இதுதொடர்பாக, மாநில தேர்தல் ஆணையர் எஸ்.கே.ஸ்ரீவாஸ்தவாவுக்கு புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கேஜரிவால் கூறியுள்ளதாவது:
  தில்லி மாநகராட்சித் தேர்தலில் பயன்படுத்துவதற்காக, வாக்களித்ததை உறுதி செய்யும் வசதி கொண்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்குப் பதிலாக, முதல் தலைமுறை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தில்லி தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

  குறைவான பாதுகாப்பு வசதி கொண்ட அந்த இயந்திரங்களை தேர்தல் ஆணையம் பயன்படுத்த முனைவது ஆச்சரியமளிக்கிறது. மாநகராட்சித் தேர்தலுக்காக ராஜஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்.

  ராஜஸ்தான் மாநிலத்தின் தோல்பூர் நகரில் சமீபத்தில் நிகழ்ந்த சம்பவத்தின் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பாஜக முறைகேடு செய்தது தெளிவாகியுள்ளது. அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியில் இருப்பதால், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  அந்த வகையில் ராஜஸ்தானில் இருந்து வரும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறைகேடானவை என்று தெரிந்திருந்தும், தில்லி மாநகராட்சித் தேர்தலில் அதைப் பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் ஏன் முயற்சி மேற்கொள்கிறது?
  அத்தகைய வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று கோருகிறோம். தில்லியில் இருக்கும் 15,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், மாநகராட்சித் தேர்தலை நடத்தப்போதுமானவையாகும்.

  மாநகராட்சித் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தொழில்நுட்ப ரீதியாக பரிசோதிக்க, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும்.

  வாக்களித்ததை உறுதி செய்யும் வசதி கொண்ட மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டே அனைத்து தேர்தல்களையும் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி, அத்தகைய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே மாநகராட்சித் தேர்தலில் பயன்படுத்த வேண்டும்.

  பாஜகவின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதைப் போல, எனது கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்புகிறேன் என்று கேஜரிவால் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai