சுடச்சுட

  

  அடுத்த ஆண்டு முதல் உருது மொழியிலும் "நீட்' தேர்வு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

  By DIN  |   Published on : 14th April 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வை (நீட்), வரும் 2018-19-ஆம் கல்வியாண்டு முதல் உருது மொழியிலும் நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
  நாடு முழுவதிலும் அடுத்த மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள "நீட்' பொது நுழைவுத் தேர்வை உருது மொழியிலும் நடத்தக் கோரி இஸ்லாமிய மாணவர் அமைப்பு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
  இந்த மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கான்வில்கர், எம்.எம்.சந்தான கெளடர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அடுத்த மாதம் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள "நீட்' நுழைவுத் தேர்வை உருது மொழியிலும் நடத்த வேண்டும் என்று மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார்.
  அதற்குப் பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது:
  நுழைவுத் தேர்வுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. இந்த நிலையில், உருது மொழியில் நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. எனவே, உடனடியாக மாயாஜாலங்களை நிகழ்த்துங்கள் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது.
  எனினும், அடுத்த 2018-19-ஆம் கல்வியாண்டில் இருந்து உருது மொழியிலும் "நீட்' நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிடுகிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
  அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் ரஞ்சித் குமார், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றார்.
  நாடு முழுவதும் தற்சமயம் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி, மராத்தி, ஒடியா, வங்காளம், அஸ்ஸாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் "நீட்' பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai