சுடச்சுட

  

  "இரட்டை இலை' சின்னம் உரிமை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு சசிகலா கோரிக்கை

  By DIN  |   Published on : 14th April 2017 02:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ADMKk

  அதிமுகவின் "இரட்டை இலை' தேர்தல் சின்னத்துக்கு உரிமை கோரும் விவகாரத்தில் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிமுக "அம்மா' அணி பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் வியாழக்கிழமை கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரது தலைமையை ஏற்காமல் அக்கட்சியைச் சேர்ந்த பொருளாளரும் தமிழக முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனித்துச் செயல்பட்டார். அவருக்கு ஆதரவாக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், தமிழக முன்னாள் அமைச்சர் கே.பாண்டியராஜன் உள்ளிட்டோர் சசிகலா அணியில் இருந்து விலகினர். இதைத் தொடர்ந்து, மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன் தலைமையில் 10 எம்.பி.க்கள், பாண்டியராஜன் உள்ளிட்ட 12 எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் அணிக்கு வந்தனர்.
  இந்நிலையில், ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதையடுத்து, இரு அணிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு, அதிமுகவின் "இரட்டை இலை' சின்னத்துக்கு உரிமை கோரின. ஆனால், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க கால அவகாசம் குறைவாக இருப்பதால் தாற்காலிகமாக அதிமுக பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்ட தேர்தல் ஆணையம், அக்கட்சியின் இரட்டை இலை தேர்தல் சின்னத்தையும் முடக்கியது.
  இதையடுத்து, "இரட்டை இலை' சின்னத்துக்கும் கட்சிக்கும் உரிமை கோரும் விவகாரத்தில் இரு தரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் வரும் 17-ஆம் தேதி உரிய ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
  இந்நிலையில், வி.கே.சசிகலா தரப்பில் தேர்தல் ஆணையத்தில் அவரது வழக்குரைஞர்கள் வியாழக்கிழமை அளித்துள்ள கடிதத்தில், "கட்சிக்கு உரிமையும் தேர்தல் சின்னமான இரட்டை இலைக்கு உரிமை கோரும் விவகாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்கள், பிரமாணப் பத்திரங்கள் போன்ற ஆவணங்களை சேகரித்து தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai