சுடச்சுட

  

  உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நேரில் ஆஜராக சி.எஸ். கர்ணன் உத்தரவு!

  By DIN  |   Published on : 14th April 2017 02:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  karnan

  தமக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுத்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உள்பட 7 நீதிபதிகளை தமது இல்லத்தில் நடைபெறவுள்ள விசாரணையில் நேரில் ஆஜராகுமாறு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
  இந்திய நீதித் துறை வரலாற்றிலேயே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை நேரில் ஆஜராகுமாறு மற்றொரு நீதிபதி உத்தரவிடுவது இதுவே முதல்முறையாகும்.
  சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து வந்த சி.எஸ். கர்ணன், அப்போதைய தலைமை நீதிபதி மற்றும் சில நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதனால் ஏற்பட்ட சர்ச்சை காரணமாக சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு சி.எஸ். கர்ணன் மாற்றப்பட்டார்.
  ஆனால், தம்மை பணியிடமாற்றம் செய்த நீதிமன்ற உத்தரவுக்கு சி.எஸ். கர்ணன் தன்னிச்சையாக இடைக்காலத் தடைவிதித்தார்.
  இதையடுத்து, சி.எஸ். கர்ணனின் இந்த நடவடிக்கைகளை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி உச்ச நீதிமன்றம் தாமாகவே வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. மேலும், இதுதொடர்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கர்ணனுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், அவரது நீதிபதி பதவிக்கான அதிகாரங்களைப் பறித்தது.
  இதனையடுத்து, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மாதம் 31-ஆம் தேதி கர்ணன் நேரில் ஆஜரானார். அப்போது அவர், தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் சில நீதிபதிகள் தன்னை வேண்டுமென்றே குறிவைப்பதாக குற்றம்சாட்டினார்.
  அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "கர்ணனின் நடவடிக்கையானது அவர் தெளிவான மனநிலையில் இல்லை என்பதை உணர்த்துகிறது. எனவே, அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு 4 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டனர்.
  கர்ணன் உத்தரவு: இந்நிலையில், தமக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உள்பட 7 நீதிபதிகளை தமது இல்லத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.
  இதுகுறித்து கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் கர்ணன் வியாழக்கிழமை கூறியதாவது:
  நான் தலித் என்ற காரணத்தால் என் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. என் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் உள்ளிட்ட 7 நீதிபதிகள் என்னை அவமானப்படுத்திவிட்டனர். எனவே, அவர்கள் மீது எஸ்.சி., எஸ்.டி. பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக எனது இல்லத்தில் நடைபெறவுள்ள விசாரணையில் மேற்குறிப்பிட்ட நீதிபதிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது என்றார் சி.எஸ். கர்ணன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai