சுடச்சுட

  

  கனடா அமைச்சர்கள் பற்றி அமரீந்தர் சிங் தெரிவித்த கருத்து அதிருப்தியளிக்கிறது: கனடா அரசு

  By DIN  |   Published on : 14th April 2017 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கனடா நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ தலைமையிலான அரசில் இடம்பெற்றுள்ள ஹர்ஜித் சஜ்ஜன் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் சீக்கிய காலிஸ்தான் பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்து அதிருப்தியளிப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
  பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அமரீந்தர் சிங் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு புதன்கிழமை பேட்டியளித்தார். அப்போது,
  "கனடா நாட்டு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தன் தந்தையைப் போலவே காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர் ஆவார். எனவே, அவர் இந்த மாதம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும்போது நான் அவரைச் சந்திக்க மாட்டேன். உண்மையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியூ தலைமையிலான அமைச்சரவையில் ஹர்ஜித் சஜ்ஜன் உள்பட 5 அமைச்சரர்கள் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்கள்.
  எனவே, நான் அவர்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ள மாட்டேன்' என்று தெரிவித்திருந்தார்.
  இந்நிலையில், அமரீந்தர் சிங்கின் கருத்துக்கு தில்லியில் உள்ள கனடா நாட்டுத் தூதரகம் பதிலளித்துள்ளது.
  இது தொடர்பாக அத்தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  கனடா அமைச்சர்கள் தொடர்பான கருத்து அதிருப்தி அளிப்பதோடு, அவை தவறானவையும் ஆகும். பஞ்சாப் மக்கள் மற்றும் அந்த மாநில அரசுடனான உறவை கனடா பெரிதும் மதிக்கிறது. இந்த உறவை மேலும் வலுப்படுத்த எங்கள் அரசு ஆர்வத்துடன் காத்திருக்கிறது.
  கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜனை பஞ்சாப் முதல்வர் சந்திக்க மாட்டார் என்ற தகவலால் வருந்துகிறோம். எனினும், பஞ்சாப் முதல்வர் கனடாவுக்கு வருமாறு அழைக்கிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  ஹர்ஜித் சஜ்ஜன் அடுத்த வாரம் இந்தியாவில் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ள அவர், தில்லியில் வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ள கருத்தரங்கில் உரையாற்றவிருக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai