சுடச்சுட

  

  காஷ்மீரில் கலகங்களை ஊக்குவிக்கிறது பாகிஸ்தான்: மத்திய அரசு

  By DIN  |   Published on : 14th April 2017 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடும் போக்கை மாற்றிக்கொண்டு, உள்ளூர் மக்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு கலகங்களை பாகிஸ்தான் ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  காஷ்மீரில் நீடிக்கும் பயங்கரவாத ஊடுருவல்கள் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
  கடந்த 2016-ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் தந்திர நடவடிக்கைளில் ஒரு மாற்றத்தைக் காண முடிகிறது. ஜம்மு-காஷ்மீரில் இதுவரை பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து வந்த பாகிஸ்தான், தற்போது சமூக வலைதளங்கள் மூலமாக பயங்கரவாத கருத்துகளைப் பரப்பி, அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு மக்களைத் தூண்டி வருகிறது.
  ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2016-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 322 வன்முறைச் சம்பவங்களில், பயங்கரவாதிகள் 150 பேரும், பாதுகாப்புப் படையினர் 82 பேரும், அப்பாவி பொதுமக்கள் 18 பேரும் உயிரிழந்தனர்.
  இதேபோல், கடந்த 2015-ஆம் ஆண்டில் நிகழ்ந்த 208 வன்முறைச் சம்பவங்களில், பயங்கரவாதிகள் 108 பேரும், பாதுகாப்புப் படையினர் 39 பேரும், அப்பாவி பொதுமக்கள் 17 பேரும் உயிரிழந்தனர்.
  மேலும், கடந்த ஆண்டு பாகிஸ்தானில் இருந்து ஊருவல் முயற்சிகள் அதிகரித்தன.
  கடந்த 2015-ஆம் ஆண்டு, காஷ்மீருக்குள் 121 ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றன. இந்த முயற்சிகளின் மூலம் 33 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவினர்.
  இதேபோல், கடந்த 2016-ஆம் ஆண்டு 364 ஊடுருவல் முயற்சிகள் நடைபெற்றன. இச் சம்பவங்களில் 122 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவினர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  காங்கிரஸ் உருவாக்கிய பிரச்னை - வெங்கய்ய நாயுடு: இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் பிரச்னை, காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட ஒன்று என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான வெங்கய்ய நாயுடு குற்றம் சாட்டினார்.
  திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: காஷ்மீர் பிரச்னை, காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்டதாகும். தற்போது அந்தப் பிரச்னையை அரசியலுக்காக அக்கட்சி பயன்படுத்தி வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்தார் வல்லபபாய் படேலிடம் ஒப்படைத்திருந்தால், அவர் சரியாகக் கையாண்டு தீர்வு கண்டிருப்பார் என்றார் வெங்கய்ய நாயுடு.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai