சுடச்சுட

  

  குல்பூஷண் ஜாதவை தாயகம் அழைத்து வர முயற்சி: மத்திய அரசு

  By DIN  |   Published on : 14th April 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாகிஸ்தான் அரசால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை விடுவித்து தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  இருப்பினும், பாகிஸ்தானில் அவர் எங்கு சிறை வைக்கப்பட்டிருக்கிறார்? அவரது நிலை என்ன? என்பன குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை என்று அரசு கூறியுள்ளது.
  இந்தியக் கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவ், பாகிஸ்தானில் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.
  இதற்கு இந்தியா கடும் கண்டனத்தைப் பதிவு செய்தது. இந்த நடவடிக்கையால் கடும் எதிர்விளைவுகளை பாகிஸ்தான் சந்திக்க நேரிடும் என்றும் மத்திய அரசு எச்சரித்தது. இருந்தபோதிலும், தங்களுக்கு எதிராகத் தொடுக்கப்படும் எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் சந்திக்கத் தயார் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தெரிவித்தார்.
  இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
  குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் பாகிஸ்தானுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறோம். அவர் எங்கு உள்ளார்? எப்படி இருக்கிறார்? என்பன குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை. அதேவேளையில், அவரை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான முயற்சியை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அவை எத்தகைய முயற்சிகள் என்பதை தற்போதைய சூழலில் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  கொலைக்கு ஒப்பாகும்: இதனிடையே, குல்பூஷண் ஜாதவுக்கு மரண தண்டனையை பாகிஸ்தான் அரசு நிறைவேற்றினால், அது கொலைக்கு ஒப்பாகும் என்று மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சர் சுபாஷ் பாம்ரே தெரிவித்தார்.
  இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறுகையில், "ஜாதவ் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பதற்கான உறுதியான ஆதாரங்களை வெளியிடுமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது; எந்த சட்டப் பிரிவின் அடிப்படையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது? என்பது குறித்த விவரங்களும் பாகிஸ்தானிடம் கோரப்பட்டுள்ளன; பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை கண்டனத்துக்குரியது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai