சுடச்சுட

  

  தில்லியில் குட்டிக்கரணம் அடித்து தமிழக விவசாயிகள் போராட்டம்

  By DIN  |   Published on : 14th April 2017 02:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  tnfarmers

  தில்லி ஜந்தர் மந்தரில் வியாழக்கிழமை குட்டிக்கரணம் அடித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள்.

  தில்லி ஜந்தர் மந்தரில் 31-ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள், சாலையில் குட்டிக்கரணம் அடித்து தங்கள் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.
  போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் ஜந்தர் மந்தர் சாலையில் இருந்து வேறு வாகனங்களில் சென்று சாலை மறியல், முழு நிர்வாணம் போன்ற வழிகளில் மக்கள் கவனத்தை ஈர்க்கத் திட்டமிட்டனர். இதை அறிந்த காவல் துறையினர் கடந்த புதன்கிழமை முதல் ஜந்தர் மந்தர் சாலையின் ஒரு பகுதியில் மட்டும் வாகனங்கள் வந்து செல்ல அனுமதி அளித்தனர். நாடாளுமன்ற தெரு காவல் நிலைய சாலையை இணைக்கும் வழியை காவல் துறையினர் தடுப்புகள் போட்டு அடைத்தனர்.
  இதனால், தங்களுக்கு காவல் துறை ஒதுக்கிய பகுதியில் அமர்ந்திருக்கும் விவசாயிகள், அவர்களின் போராட்டம் பற்றிய செய்திகளை சேகரிக்க தொலைக்காட்சி ஊடகங்கள் வந்தால் அவை விடியோ எடுக்க வசதியாக, தடுப்புகள் அருகே சென்று போராட்டத்தையொட்டி முன்வைக்கும் கோஷங்களை எழுப்புகின்றனர்.
  இதையடுத்து, வியாழக்கிழமை காலையில் ஊடகங்கள் ஜந்தர் மந்தருக்கு வந்ததும் சாலையில் குட்டிக்கரணம் அடித்த விவசாயிகள், "ஐயா, மத்திய அரசே, மாநில அரசே எங்கள் நிலையை கண்டு மனம் இறங்க மாட்டீர்களா? விவசாயிகளை துயரப்பட விடலாமா' என கண்ணீர் மல்க குரல் எழுப்பினர்.
  இந்நிலையில், திருவாடானை தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் ஜந்தர் மந்தருக்கு வியாழக்கிழமை வந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கருணாஸ் கூறுகையில், "பொதுநலன் கருதி விவசாயிகள் முன்வைத்துள்ள அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
  இதற்கிடையே, விவசாயிகளின் போராட்டத்தை தீவிரமாக்கும் வகையில் ஊடகங்களின் போர்வையில் சிலர் அய்யாக்கண்ணு குழுவினரை தூண்டி விடுவதாகக் காவல் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, அய்யாக்கண்ணு குழுவினரின் செய்தியை சேகரிக்க வரும் நிருபர்கள், ஒளிப்பதிவுக் குழுவினர் ஆகியோரின் விவரங்களை மத்திய உளவுத் துறையினர் சேகரித்து வருவதாக தில்லி காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai