சுடச்சுட

  

  பேரவை இடைத்தேர்தல்: தில்லி உள்பட 5 மாநிலங்களில் பாஜக வெற்றி

  By DIN  |   Published on : 14th April 2017 04:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajouri

  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து பெற்ற தில்லி ரஜெüரி கார்டன் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக - சிரோமணி அகாலி தளம் கூட்டணி வேட்பாளர் மன்ஜீந்தர் சிங் சிர்சா .

  தில்லி, ஹிமாசலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 10 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், 5 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், திரிணமூல் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளன.

  தில்லி, ஹிமாசலப் பிரதேசம், ராஜஸ்தான், அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்களில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், மத்தியப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு தொகுதிகளிலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின் முடிவுகள், வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டன.


  பிரதமர் மோடி நன்றி

  8 மாநில சட்டப் பேரவை இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதுதொடர்பாக, அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், ""நல்ல நிர்வாகம், வளர்ச்சி ஆகியவற்றுக்கான அரசியலில் முழு நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

  தில்லியில்...

  தலைநகர் தில்லியில் ரஜெளரி கார்டன் சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தில்லியில் உள்ளாட்சித் தேர்தல் அடுத்த சில தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், இந்த வெற்றி பாஜகவினருக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது. அதேவேளையில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டதுடன், டெபாசிட்டையும் இழந்துவிட்டது.
  அந்தத் தொகுதியில் பாஜக-அகாலி தளக் கூட்டணி வேட்பாளர் மன்ஜீந்தர் சிங் சிர்சா, 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மீனாக்ஷி சந்தேலாவைத் தோற்கடித்தார்.

  மத்தியப் பிரதேசத்தில்...

  மத்தியப் பிரதேச மாநிலம், பந்தவ்கர் சட்டப்பேரவைத் தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டது. அந்தத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சாவித்ரி சிங்கை, 25,476 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சிவநாராயண் சிங் தோற்கடித்தார்.

  அட்டேர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. 58,371 வாக்குகள் பெற்ற பாஜக வேட்பாளர் அரவிந்த் சிங் படோரியாவை 857 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஹேமந்த் கடாரே தோற்கடித்தார்.

  கர்நாடகத்தில்...

  கர்நாடக மாநிலம், நஞ்சன்கூடு, குண்டல்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதிகளை ஆளும் காங்கிரஸ் கட்சி தக்க வைத்துக் கொண்டது.

  நஞ்சன்கூடு தொகுதியில் பாஜக வேட்பாளர் வி.சீனிவாச பிரசாதை 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கலாலே என்.கேசவமூர்த்தி தோற்கடித்தார். இதேபோல், குண்டல்பேட்டை தொகுதியில் பாஜக வேட்பாளர் சி.எஸ்.நிரஞ்சன் குமாரை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கீதா மகாதேவபிரசாத் தோற்கடித்தார்.

  மேற்கு வங்கத்தில்...

  மேற்கு வங்க மாநிலம், காந்தி தக்ஷிண் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரிமா பட்டாசார்யா 42,526 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

  பாஜக வேட்பாளர் 52,843 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். காங்கிரஸ், இடதுசாரி முன்னணி வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.

  ஹிமாசலில்...

  ஹிமாசலப் பிரதேச மாநிலம், போரஞ்ச் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரமீளா தேவியை விட 8,290 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளர் அனில் திமான் வெற்றி பெற்றார்.

  அஸ்ஸாமில்...

  அஸ்ஸாம் மாநிலம், தேமாஜி சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பாபுல் சோனாவாலை 9,285 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ரனோஜ் பேகு தோற்கடித்தார்.

  ராஜஸ்தானில்...

  ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பன்வாரி லால் சர்மாவை 38,678 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் ஷோபா ராணி தோற்கடித்தார்.

  ஜார்க்கண்டில்...

  ஜார்க்கண்ட் மாநிலம், லித்திப்பாரா பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ஹேம்லால் முர்முவை விட 12,900 வாக்குகள் அதிகம் பெற்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வேட்பாளர் சைமன் மாரண்டி வெற்றி பெற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai