சுடச்சுட

  

  மத்திய அரசுத் துறைகள் மீதான ஊழல் புகார்கள் 67% அதிகரிப்பு: சிவிசி

  By DIN  |   Published on : 14th April 2017 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய அரசின் பல்வேறு துறைகள் மீதான ஊழல் புகார்கள் 67 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.
  இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் தாக்கல் செய்துள்ள ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  மத்திய அரசின் பல்வேறு துறைகள் குறித்து மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் 29,838 புகார்கள் வந்தன. இந்த எண்ணிக்கை கடந்த 2016-ஆம் ஆண்டில் 49,847-ஆக அதிகரித்தது. இது 67 சதவீத அதிகரிப்பாகும். அதே நேரத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டில் 62,363 புகார்கள் வந்திருந்தன. 2014-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-ஆம் ஆண்டில் புகார்களின் எண்ணிக்கை 50 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்தது.
  கடந்த 2012-ஆம் ஆண்டில் 37,039 புகார்களும், 2013-ஆம் ஆண்டில் 31,432 புகார்களும் வந்திருந்தன.
  இதில் ரயில்வே துறை மீது மிக அதிகமாக 11,200 புகார்கள் கடந்த 2016-ஆம் ஆண்டில் பெறப்பட்டன. இதில், 8,852 புகார்கள் ரயில் பணியாளர்கள் மீதானதாகும். தலைநகர் தில்லியில் மத்திய அரசுத் துறைகள் மீது புகார் தெரிவிக்கப்படுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. 2015-ஆம் ஆண்டில் தில்லியில் இருந்து 5,139 புகார்கள் வந்திருந்தன. 2016-ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 969-ஆக குறைந்துவிட்டது.
  ரயில்வே துறைக்கு அடுத்தபடியாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் மீது அதிக புகார்கள் வந்துள்ளன. இதற்கு அடுத்ததாக அதிக அளவில் ஊழல் புகார்களுக்கு உள்ளானவர்களில் வங்கி அதிகாரிகளும், அதற்கு அடுத்த இடத்தில் பெட்ரோலியத் துறை அதிகாரிகளும் உள்ளனர்.
  வருமான வரித் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை, தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள் மீது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
  தொழிலாளர் நலத்துறை, உணவு, நுகர்வோர் விவகாரத் துறை, சுங்கத் துறை, பொதுத் துறை காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், உருக்குத் துறை அதிகாரிகள் மீது 1000 முதல் 2000 வரையிலான ஊழல் புகார்கள் வந்துள்ளன.
  பாதுகாப்பு, நிலக்கரி சுரங்கத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, சுகாதாரம், குடும்ப நலத் துறை, கப்பல் துறை அதிகாரிகள் மீது சுமார் 500 முதல் 1000 வரையிலான ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
  ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் விசாரணை வரம்புக்குள் வராத மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், பிற அமைப்புகள் குறித்தும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்துக்கு புகார் வந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai